பைந்தூரில் பாலம் இடிந்த இடத்தில் கலெக்டர் ஆய்வு
பைந்தூரில் பாலம் இடிந்த இடத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
மங்களூரு-
உடுப்பி மாவட்டம் பைந்தூர் டவுன் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையில் தெக்கர்சே அருகே உள்ள சிறிய பாலம் ஒன்று நீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல்போனது. இதையடுத்து அந்த வாகனங்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் வித்யாகுமாரி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அந்த பாலம் கடந்த ஆண்டுதான் ரூ.3 லட்சம் செலவில் கட்டப்பட்டதாக கூறப்பட்டது. ஒரு ஆண்டு கூட தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த பாலம் இடிந்து விழுந்திருப்பதாக பொதுமக்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.
மேலும் புதிய பாலம் அமைத்து கொடுக்கவேண்டும் என்று தெக்கர்சேவை சேர்ந்த மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற கலெக்டர் வித்யாகுமாரி மழை நின்றவுடன், பாலத்தை சீரமைத்து கொடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் பைந்தூர் தாசில்தார், டவுன் பஞ்சாயத்து அதிகாரிகளை அழைத்த கலெக்டர், இரும்பு பாலம் அமைத்து கொடுக்கும்படி உத்தரவிட்டார்.