பெங்களூருவில் 42 ஏரிகளை அழித்து கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது சட்டசபையில் கர்நாடக அரசு தகவல்


பெங்களூருவில் 42 ஏரிகளை அழித்து கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது  சட்டசபையில் கர்நாடக அரசு தகவல்
x
தினத்தந்தி 19 Sep 2022 6:45 PM GMT (Updated: 19 Sep 2022 6:45 PM GMT)

பெங்களூருவில் 42 ஏரிகளை அழித்து கட்டிடங்கள் கட்டப்பட்டு இருப்பதாக சட்டசபையில் கர்நாடக அரசு கூறியுள்ளது.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபையில் மழை வெள்ள சேதங்கள் குறித்த விவாதத்திற்கு கர்நாடக அரசின் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பதிலளிக்கையில் கூறியதாவது:-

தற்போது கட்டிடங்கள்

பெங்களூருவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது. நகரில் மொத்தம் 9 மண்டலங்கள் உள்ளன. இதில் மகாதேவபுரா, பொம்மனஹள்ளி மண்டலங்கள் மட்டுமே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. அதுவும் அந்த மண்டலங்களிலும் சில பகுதிகளில் மட்டுமே மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டன. இது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் ஆகும்.

இவற்றுக்கு காரணம் பெங்களூருவில் 42 ஏரிகள் இருந்த இடத்தில் தற்போது கட்டிடங்கள் இருக்கின்றன. அந்த ஏரிகள் முற்றிலும் அழிக்கப்பட்டு பஸ் நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், குடியிருப்பு பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெங்களூரு வளர்ச்சி ஆணையம் சார்பில் 28 ஏரிகள் அழிக்கப்பட்டு லே-அவுட்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி சார்பில் 5 ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்கள் 7 ஏரிகளை ஆக்கிரமித்து கொண்டுள்ளன.

டாலர்ஸ் காலனி

இந்த 42 ஏரிகள் அழிந்தது 1980-ம் ஆண்டு வாக்கில் நடைபெற்றுள்ளது. ராஜாஜிநகர், எச்.ஏ.எஸ்., கோரமங்களா, டொம்ளூர், டாலர்ஸ் காலனி, எச்.ஆர்.பி., பி.டி.எம். லே-அவுட், பானசவாடி போன்ற பகுதிகள் ஏரிகளை அழித்து உருவாக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகள் ஆகும்.

இவை எந்த ஆட்சியில் நடைபெற்றது என்று குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை. அன்றைய தினம் பஸ் நிலையம் அமைக்க நகரில் எவ்வளவோ நிலம் இருந்தது. ஆனால் அதை விட்டுவிட்டு ஏரிகளை அழித்து பஸ் நிலையத்தை அமைத்தனர். இதுபோன்ற நடவடிக்கைகளால் தான் நகரில் இன்று மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.

சித்தராமையா

அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, '30, 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயங்களை இப்போது சொல்வதால் பிரச்சினை தீராது. அந்த பகுதிகளில் உள்ள கட்டிடங்களை இடித்துவிட்டு மீண்டும் ஏரிகளை ஏற்படுத்துகிறீர்களா?. அது சாத்தியமா?. தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளத்திற்கு என்ன தீர்வு, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.


Next Story