சிறுவர்களை மிரட்டி ஓரினச்சேர்க்கை: பத்திரிைகயாளருக்கு 2 வழக்கில் 13 ஆண்டுகள் சிறை தண்டனை
சிறுவர்களை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட பத்திரிகையாளருக்கு 2 வழக்கில் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ விரைவு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
உடுப்பி: சிறுவர்களை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட பத்திரிகையாளருக்கு 2 வழக்கில் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ விரைவு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
சிறுவர்களுடன் ஓரினச்சேர்க்கை
உடுப்பி மாவட்டம் குந்தாபுராவை சேர்ந்தவர் சந்திரா கே. பத்திரிகையாளரான இவர் பள்ளி சிறுவர்களை ஆசை வார்த்தை கூறி வனப்பகுதிகளுக்கு அழைத்து சென்று ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டிருந்தார். மேலும் அதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து மிரட்டி அந்த சிறுவர்களுடன் அவர் மீண்டும் மீண்டும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பைந்தூர் போலீசார் சந்திரா ஹெம்மாடியை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கடந்த 2018-ம் ஆண்டு 28-ந்தேதி நடந்தது. போலீஸ் விசாரணையில், சந்திரா ஹெம்மாடி 21 சிறுவர்களை வலுக்கட்டாயமாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
2 வழக்கில் தீர்ப்பு
இதுதொடர்பாக பைந்தூர் போலீசில் 16 வழக்குகளும், கங்கொல்லி போலீசில் 3 வழக்குகளும், குந்தாபுரா புறநகர் மற்றும் கொல்லூர் போலீசில் தலா ஒரு வழக்கும் பதிவாகி இருந்தது.
இதுதொடர்பான வழக்குகள் உடுப்பி மாவட்ட கூடுதல் கோர்ட்டு மற்றும் போக்சோ விரைவுகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதுவரை 11 வழக்குகளில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இதில் 8 வழக்குகளில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என கூறி விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் சந்திரா ஹெம்மாடிக்கு எதிரான 2 வழக்கில் நேற்று முன்தினம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது, ஒரு வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், மற்றொரு வழக்கில் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி சீனிவாச சுவர்ணா தீர்ப்பு கூறினார்.