சிக்கமகளூருவில் கள்ளக்காதலியை கொன்று உடல் எரிப்பு தொழிலாளி கைது


சிக்கமகளூருவில்  கள்ளக்காதலியை கொன்று உடல் எரிப்பு  தொழிலாளி கைது
x
தினத்தந்தி 20 Jun 2023 6:45 PM GMT (Updated: 20 Jun 2023 6:45 PM GMT)

சிக்கமகளூருவில் கள்ளக்காதலியை கொலை செய்து உடலை தீ வைத்து எரித்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

சிக்கமகளூரு-

சிக்கமகளூருவில் கள்ளக்காதலியை கொலை செய்து உடலை தீ வைத்து எரித்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

வட மாநில பெண்

சிக்கமகளூரு அருகே மல்லந்தூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட சித்தாபுரா கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 50), கூலி தொழிலாளி. அதே பகுதியில் இருந்த காபி தோட்டம் ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்தார். இதேபோல வட மாநிலத்தை சேர்ந்த ஜெயம்மா (40). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலை தேடி சிக்கமகளூரு வந்திருந்தார். மல்லந்தூர் பஸ் நிலையத்தில் ஜெயம்மா அமர்ந்திருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற நாகராஜ் அவரை பார்த்தார்.

அப்போது ஜெயம்மாவிடம், நாகராஜ் பேச்சு கொடுத்தார். வேலை தேடி வந்திருப்பதாக ஜெயம்மா கூறினார். இதையடுத்து நாகராஜ், நான் வேலை பார்க்கும் இடத்தில் கூலி வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது என்று கூறினார். இதை கேட்ட ஜெயம்மா, நாகராஜ் வேலை பார்த்து வந்த காபி தோட்டத்தில் வேலை செய்வதற்கு ஒப்பு கொண்டார்.

எரித்து கொலை

இதையடுத்து நாகராஜ், ஜெயம்மாவை அழைத்து வந்து, அங்கிருந்த வீடு ஒன்றில் தங்க வைத்தார். ஒரே இடத்தில் தங்கியிருந்து வேலை பார்த்ததால், அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து கொண்டனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் ஜெயம்மா காபி தோட்டம் அருகே தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதை பார்த்த கூலி தொழிலாளிகள் மல்லந்தூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போலீசார் அது ஜெயம்மாவின் உடல்தான் என்பதை உறுதி செய்தனர். ஆனால் ஜெயம்மாவின் சொந்த ஊர் குறித்த தகவல் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து போலீசார் கொலையாளிகள் குறித்து விசாரித்தனர். அப்போது ஜெயம்மாவுடன் வேலை பார்த்து வந்த நாகராஜ் என்பவர் மீது சந்தேகம் எழுந்தது. போலீசார் நாகராஜை தேடியபோது தலைமறைவாகியிருந்தார்.

கூலி தொழிலாளி கைது

இருப்பினும் தனிப்படை அமைத்த போலீசார் நேற்று முன்தினம் இரவு நாகராஜை கைது செய்தனர். விசாரணையில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இந்த கருத்துவேறுபாடு மோதலாக மாறியது.

நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த நாகராஜ், ஜெயம்மாவை அடித்து கொலை செய்தார். பின்னர் அவரது உடலை தீ வைத்து எரிந்ததாக கூறியுள்ளார். இது குறித்து மல்லந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


Next Story