சிக்கமகளூருவில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.6 லட்சம் பறிமுதல்
சிக்கமகளூருவில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சிக்கமகளூரு-
சிக்கமகளூரு மாவட்டத்தில் ஆவணங்கள் கொண்டு சென்ற ரூ.6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தல்
கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் வருகிற 10-ந்தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 13-ந் தேதி நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் கடந்த 13-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்பு மனு தாக்கலுக்கு நாளை (வியாழக்கிழமை) கடைசி நாளாகும். இந்தநிலையில் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க மாநிலம் முழுவதும் சோதனை சாவடிகள் அமைத்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேப்போல் சிக்கமகளூரு மாவட்டத்திலும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் அருகே உள்ள சிங்கடிகெேர சோதனை சாவடியில் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். ரூ.1 லட்சம் ரொக்கம் இருந்தது.
ரூ.6 லட்சம் பறிமுதல்
ஆனால் அதற்கான ஆவணங்கள் காரில் வந்தவரிடம் இல்லை. இதையடுத்து ரூ.1 லட்சம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆவணங்களை காண்பித்து விட்டு பணத்தை வாங்கிவிட்டு செல்லும் படி போலீசார் கூறினர். இதேபோல் அந்த வழியாக வந்த லாரி, மற்றும் மோட்டார் சைக்கிளை தடுத்தி நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.4 லட்சத்து 18 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கடூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேப்போல் தரிகெரே தாலுகா லிங்கதவல்லி கிராமத்தில் உள்ள சோதனை சாவடியில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தவழியாக வந்த லாரியை சோதனை செய்தனர். அதில் ரூ.82 ஆயிரம் ரொக்கம் இருந்தது. ஆனால் அதற்கான ஆவணங்கள் லாரியில் வந்தவரிடம் இல்லை. இதையடுத்து பறக்கும் படையினர் ரூ.82 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
ஆவணங்கள்
இதுகுறித்து லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் முடியும் வரை இதுபோன்ற சோதனை தொடர்ந்து நடைபெறும். பொதுமக்கள் பணத்தை வெளியே கொண்டு செல்லும் போது அதற்கான ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.