தட்சிண கன்னடாவில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் மந்திரி தினேஷ் குண்டுராவ் தொடங்கி வைத்தார்


தட்சிண கன்னடாவில்  அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் மந்திரி தினேஷ் குண்டுராவ் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 12 Jun 2023 12:15 AM IST (Updated: 12 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை மந்திரிகள், தினேஷ் குண்டுராவ், லட்சுமி ஹெப்பால்கர் தொடங்கி வைத்தனர்.

மங்களூரு-

தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை மந்திரிகள், தினேஷ் குண்டுராவ், லட்சுமி ஹெப்பால்கர் தொடங்கி வைத்தனர்.

அரசு திட்டம் தொடக்கம்

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. இந்தநிலையில் அரசு அறிவித்தப்படி நேற்று பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம் செய்யும் சக்தி திட்டத்தை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார். மாநில முழுவதும் நேற்று இந்த திட்டம் அமலுக்கு வந்தது.

தட்சிண கன்னடா மாவட்டத்தின் பொறுப்பு மந்திரியும், சுகாதாரத்துறை மந்திரியுமான தினேஷ் குண்டுராவ், மங்களூருவில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் நகர பஸ்களில் பெண்களுடன் பயணித்தார். மேலும் அரசு பஸ்களில் பயணிக்கும் பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் கார்டுகளையும் மந்திரி தினேஷ் குண்டுராவ் வழங்கினார்.

லட்சுமி ஹெப்பால்கர் தொடங்கி வைத்தார்

இதேபோல உடுப்பியில் நடந்த நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரியும், மாவட்ட பொறுப்பு மந்திரியுமான லட்சுமி ஹெப்பால்கர் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை தொடங்கி வைத்தார். இதற்கு முன்னதாக உடுப்பி சென்ற அவர் கிருஷ்ணர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து நிருபர்களுக்கு பேட்டியளித்த லட்சுமி ஹெப்பால்கர் கூறியதாவது:-

உடுப்பி மாவட்ட பொறுப்பு மந்திரியாக மாநில அரசு என்னை நியமித்துள்ளது. அதன்படி உடுப்பி மாவட்டத்திற்கு வந்து, அரசு பஸ்களில் பெண்களுக்கான இலவச பயணம் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன். வறுமையில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இந்த திட்டம் உதவியாக இருக்கும். இதை பெண்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும். இதேபோல அரசு அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும் வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதிக்குள் அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story