உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் தோல்வி மத்திய மந்திரி நாராயணசாமி பேச்சு


உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றுவதில்  காங்கிரஸ் தோல்வி  மத்திய மந்திரி நாராயணசாமி பேச்சு
x
தினத்தந்தி 23 Jun 2023 6:45 PM GMT (Updated: 24 Jun 2023 9:27 AM GMT)

உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து விட்டதாக மத்திய மந்திரி நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சிக்கமகளூரு-

உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து விட்டதாக மத்திய மந்திரி நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

அரசு திட்டங்கள் தோல்வி

சித்ரதுர்காவில் பா.ஜனதா கட்சி சார்பில் நடந்த கூட்டத்தில் மத்திய மந்திரி நாராயணசாமி, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து நிருபர்களுக்கு பேட்டியளித்த மத்திய மந்திரி நாராயணசாமி கூறியதாவது:-

காங்கிரஸ் ஆட்சி அமைத்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. அதற்குள் காங்கிரஸ் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுவிட்டது. 165 வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு, அதை நிறைவேற்றுவதாக கூறினர்.

அதை நம்பி மக்களும் வாக்களித்தனர். ஆனால் தற்போது 5 உத்தரவாத திட்டங்களை கூட நிறைவேற்ற முடியாமல் திணறி வருகின்றனர். இந்த உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் தோல்வியடைந்துவிட்டது. காங்கிரஸ் கட்சியின் இந்த தோல்வியால், மக்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கிவிட்டனர்.

9 ஆண்டு சாதனை

இதே சூழ்நிலை மாநில முழுவதும் உள்ளது. காங்கிரஸ் கட்சியில் உள்ள யாரும், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தியின் பெயரை கூறி வாக்குசேகரிப்பது இல்லை. ஆனால் பா.ஜனதா கட்சி பிரதமர் மோடியை முன்னிறுத்தியே செல்கிறது.

அவரது 9 ஆண்டு கால ஆட்சியை பற்றிதான் மக்கள் இன்றளவும் பேசி வருகின்றனர். இந்த 9 ஆண்டுகால சாதனையை பிரதமர் மோடி அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில், கொண்டாடினார். இது இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அவப்பெயர் ஏற்பட்டுள்ளது

இதை தொடர்ந்து முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கூறியதாவது:-

மாநிலத்தில் பா.ஜனதா தோல்வியடைந்து விட்டதால் யாரும் எங்களை சாதாரணமாக நினைத்துவிட கூடாது. பா.ஜனதா தொண்டர்கள் யாரும் தோல்வியை பார்த்து அஞ்சுபவர்கள் கிடையாது. இனி வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களை கைப்பற்றும்.

தேர்தலில் போது காங்கிரஸ் அளித்த உத்தரவாத திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் தவித்து வருகிறது. வீடு வீடாக சென்று உத்தரவாத அட்டையை வழங்கினால் போதாது. அதனை நிறைவேற்றவேண்டும். மத்திய அரசின் 9 ஆண்டு கால ஆட்சியை உலக முழுவதும் கொண்டாடி வருகின்றனர். ஆனால் ஆட்சிக்கு வந்த 30 நாட்களில் காங்கிரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story