கோவாவில் பாஜக மந்திரியை பெண் ஒருவருடன் தொடர்புபடுத்தி சமூக வலைத்தளங்களில் அவதூறு: போலீஸ் வழக்குப்பதிவு
கோவாவில் பாஜக மந்திரியை பெண் ஒருவருடன் தொடர்புபடுத்தி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பானாஜி,
கோவாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரமோத் சாவந் தலைமையிலான அமைச்சரவையில் மந்திரியாக இருப்பவர் மவுவின் கோடின்கோ. போக்குவரத்துத்துறை மந்திரியாக்இருக்கும் மவுவின் கோடின்கோ, ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் இழிவான கருத்துக்களுடன் பகிரப்பட்டு வருகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மந்திரி தரப்பு அம்மாநில காவல்துறையில் இது தொடர்பாக புகார் அளித்தது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள கோவா மாநில போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "துணை பஞ்சாயத்து தலைவராக இருக்கும் ஒரு பெண், போக்குவரத்து துறை மந்திரியுடன் நெருக்கமாக இருப்பது போன்று, வேண்டும் என்றே சித்தரித்த ஒரு புகைப்படத்தை மர்ம நபர்கள் பரப்பி வருகின்றனர். பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் அதிகம் பரப்பப்பட்டு வருகிறது. மந்திரியின் புகாரை அடுத்து, வழக்குப்ப்திவு செய்துள்ளோம்" என்றனர்.