கர்நாடகத்தில், பா.ஜனதா அரசு தூங்குகிறது
கர்நாடகத்தில், பா.ஜனதா அரசு தூங்குவதாக டி.கே.சிவக்குமார் கூறினார்.
பல்லாரி:
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பல்லாரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
150 தொகுதிகளில் வெற்றி
பா.ஜனதா தலைவர்கள் என்னையும், சித்தராமையாவையும் விமர்சிக்கிறார்கள். அவர்கள் இரவில் தூங்கும்போதும், காலையில் எழும்போதும் எங்களையே நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஏதோ ஒரு வகையில் அவா்கள் எங்களை நினைத்து கொள்கிறார்கள் அல்லவா, அது போதும். கர்நாடகத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பாதயாத்திரைக்கு யாரையும் வலுக்கட்டாயமாக அழைத்து வரவில்லை.
கர்நாடகத்தில் 150 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பது உறுதி. பா.ஜனதா அரசு தூங்கி கொண்டிருந்தது. நாங்கள் யாத்திரையை தொடங்கிய பிறகு அவர்கள் தற்போது விழித்து கொண்டுள்ளனர். நாங்கள் பா.ஜனதா அரசை தட்டி எழுப்பும் பணியை செய்கிறோம். காங்கிரசின் யாத்திரையை பார்த்து பா.ஜனதாவினர் ஜனசங்கல்ப சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளனர்.
ஆந்திராவில் பாதயாத்திரை
ராகுல் காந்தியை எடியூரப்பா குழந்தை என்று விமர்சித்துள்ளார். அவரது வயதுக்கு ராகுல் காந்தி குழந்தையே. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை (இன்று) நடைபெற உள்ளதால் ஒரு நாள் பாதயாத்திரை நடைபெறாது. அதன் பிறகு 2 நாட்கள் ஆந்திராவில் பாதயாத்திரை நடைபெற உள்ளது. யாரை ஆதரிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறவில்லை. கர்நாடகத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு என்ன கூற வேண்டுமோ அதை நான் கூறுவேன்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.