கர்நாடகத்தில், ரோபோக்களை கொண்டு நாச வேலை நடத்த திட்டம்


கர்நாடகத்தில், ரோபோக்களை கொண்டு நாச வேலை நடத்த திட்டம்
x

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு சார்பில் கர்நாடகத்தில், ரோபோக்களை கொண்டு நாச வேலை நடத்த திட்டமிட்டதாக என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:-

குண்டுவெடிப்பு

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் ஆட்டோவில் எடுத்து சென்ற குக்கர் குண்டு வெடித்தது. இதில் வெடிகுண்டை எடுத்து சென்ற பயங்கரவாதி முகமது ஷாரிக் மற்றும் ஆட்டோ டிரைவர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் கடந்த ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் விவகாரம் என்பதால், இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) கையில் எடுத்தது. இதற்கிடையே பெங்களூரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பயங்கரவாதி ஷாரிக்கை, என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

பயங்கரவாத செயல் திட்டம்

அப்போது சிவமொக்கா மாவட்டத்தில் சோதனை குண்டுவெடிப்பு நிகழ்த்தியதும், இதற்கான பயிற்சிகளை பத்ரா ஆற்றுப்பகுதியில் மேற்கொண்டதும் தெரிந்தது. மேலும் பயங்கரவாதி கொடுத்த தகவலின்பேரில் அவரது கூட்டாளிகள் சிலரையும் என்.ஐ.ஏ. பிடித்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் பயங்கரவாதி முகமது ஷாரிக்கிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

அதாவது ஐ.எஸ்.ஐ.எஸ். எனப்படும் பயங்கரவாத அமைப்பு, கர்நாடகத்தில் ரோபோக்களை கொண்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு ரகசிய திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கர்நாடகத்தில் பல்வேறு பகுதிகளில் ரோபோக்களை கொண்டு நாசவேலை செய்யவும், அதற்காக பயங்கரவாதிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டதும் தெரியவந்தது. மேலும் பலருக்கு ரோபோட்டிக் பயிற்சிகளை கற்றுகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதும் தெரிந்தது.

குற்றப்பத்திரிகை

இதனை என்.ஐ.ஏ. விசாரணைப்பிடியில் உள்ள பயங்கரவாதிகளும் ஒப்புக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. விசாரணையில் அவர்கள் கொடுத்த தகவல்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கையாக தயார் செய்துள்ளனர். இதுதொடர்பாக என்.ஐ.ஏ. சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி பயங்கரவாதிகள் முகமது ஷாரிக், சையது யாசின், ரசீன், நதீம் பைக் உள்பட 9 பேர் மீது இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.


Next Story