குடகு மாவட்டத்தில் உள்ள சிக்லிஹொலே அணை பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு
குடகு மாவட்டத்தில் உள்ள சிக்லிஹொலே அணை பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
குடகு-
குடகு மாவட்டத்தில் உள்ள சிக்லிஹொலே அணை பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
சிக்லிஹொலே அணை
தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் கர்நாடகத்தில் உள்ள அணைகளின் உறுதித்தன்மையை ஆய்வு செய்திடக்கூறி மத்திய அரசு கர்நாடக அரசுக்கு அறிவுரை வழங்கியது. அதன்பேரில் நேற்று கர்நாடக மாநில அணை பாதுகாப்பு ஆய்வு குழுவினர் குடகு மாவட்டத்திற்கு வந்தனர். அவர்கள் முதலாவதாக சிக்லிஹொலே அணைக்கு சென்றனர். அங்கு அவர்கள் அணையை சுற்றிப்பார்த்து ஆய்வு மேற்கொண்டனர்.
அணையின் உறுதித்தன்மை, மொத்த நீர்மட்ட கொள்ளளவு, தற்போது இருக்கும் தண்ணீர் இருப்பு உள்பட பல்வேறு அம்சங்களை அவர்கள் நேரில் பார்வையிட்டனர். மேலும் அணை அதிகாரிகளிடம் கேட்டு தகவல்களை பெற்றனர்.
உறுதித்தன்மை ஆய்வு
மேலும் மதகுகளை இயக்கிப்பார்த்தும் உறுதித்தன்மையை தெரிந்து கொண்டனர். அணை நிரம்பும் தருவாயில் அவசர வழி மதகுகளை திறப்பது குறித்தும் அதிகாரிகளிடம் கேள்விகளை கேட்டு தகவல்களை பெற்றனர். அதன்பின்னர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் செல்லும் கால்வாய்களையும் பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், 'அணையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அணையின் பாதுகாப்பு தன்மை, உறுதித்தன்மை ஆகியவற்றை ஆய்வு செய்துள்ளோம். நாங்கள் ஆய்வு செய்த அம்சங்கள் குறித்து மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்போம்' என்று கூறினர்.
இந்த ஆய்வில் கர்நாடக மாநில அணை பாதுகாப்பு ஆய்வு குழு தலைவர் எஸ்.பி.கோயிமத்தூரு, மைசூரு மண்டல நீர்ப்பாசன துறை அதிகாரி வெங்கடேஷ், அணை வளர்ச்சித்திட்ட அதிகாரி சதீஷ், கே.ஆர்.எஸ். அணை இயக்குனர் மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.