மங்களூருவில், பிளாஸ்டிக் தொழிற்சாலையில் 840 டன் மூலப்பொருட்கள் திருடிய ஊழியர் உள்பட 4 பேர் கைது


மங்களூருவில், பிளாஸ்டிக் தொழிற்சாலையில் 840 டன் மூலப்பொருட்கள் திருடிய ஊழியர் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 14 Oct 2022 7:00 PM GMT (Updated: 14 Oct 2022 7:00 PM GMT)

மங்களூருவில், தனியார் தொழிற்சாலையில் 840 டன் பிளாஸ்டிக் தயாரிக்கும் மூலப்பொருட்களை திருடி விற்பனை செய்த ஊழியர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மங்களூரு;

பிளாஸ்டிக் தயாரிக்கும் மூலப்பொருட்கள்

மங்களூரு அருகே பைக்காம்பாடியில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் ெதாழிற்சாலை உள்ளது. இங்கு ஊழியராக பணியாற்றி வந்தவர் பிஜாய் கபிகாட்டை சேர்ந்த மகேஷ் குலால்(வயது 38).

இவர், தனது நண்பர்களான காஸ்டெலினோ காலனி சக்திநகரை சேர்ந்த ஆனந்த் சாகர்(39), கடந்தலையை சேர்ந்த சாய் பிரசாத்(35) ஆகியோருடன் சேர்ந்து தொழிற்சாலையில் டன் கணக்கில் மூலப்பொருட்களை திருடியுள்ளனர். பின்னர் அதனை பெங்களூருஎச்.எஸ்.பாலிமாரில் வசிக்கும் தமிழ்நாடு சென்னையை சேர்ந்த கிரண் சமானி(53) என்பவருக்கு விற்று பணம் சம்பாதித்து வந்துள்ளனர்.


4 பேர் கைது

இதுகுறித்து தொழி்ற்சாலை நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில் ஊழியர் மகேஷ் குலால் உள்பட 4 பேரையும் பனம்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். இதுபற்றி போலீசார் கூறுகையில், 'பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு குஜராத்தில் இருந்து பாலிப்ரொப்பிலீன் என்ற மூலப்பொருள்கள் வரும்.

அதனை அங்கு வேலை பார்க்கும் ஊழியர் மகேஷ் குலால், தனது நண்பர்கள் உதவியுடன் திருடி கிரண் சமானிக்கு விற்றுள்ளனர்.மேலும் அதற்கு போலி பில் தயாரித்துள்ளனர்.


ஆடம்பர வாழ்க்கை

அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2022-ம் ஆண்டு வரை போலி பில் தயாரித்து மகேஷ் குலால் உள்ளிட்டோர்840 டன் பாலிப்ரோப்பிலீன் மூலப்பொருளை திருடி விற்று சம்பாதித்துள்ளனர். அந்த பணத்தில் மகேஷ் குலால், சொத்து, சொகுசு கார்கள், மனைவி பெயரில் வங்கிகளில் பணம் போட்டு, 3 சொகுசு சலூன்களை நடத்தி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளார். மேலும் ஆனந்த் சாகர் உள்பட மற்றவர்களும் ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து ரூ.74 லட்சம் மதிப்புள்ள 6 செல்போன்கள், 4 மடிக்கணினி, விலையுயர்ந்த கார்கள், 1 லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் சிலருக்கு தொடர்புள்ளதால் அவர்களையும் வலைவீசி தேடிவருகிறோம்' என்றனர்.


Next Story