மங்களூருவில் ஓடுபாதையில் இருந்து பறக்க தயாரான விமானம் மீது பறவை மோதியதால் பரபரப்பு


மங்களூருவில் ஓடுபாதையில் இருந்து பறக்க தயாரான விமானம் மீது பறவை மோதியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 25 May 2023 6:45 PM GMT (Updated: 25 May 2023 6:46 PM GMT)

மங்களூரு விமான நிலையத்தில் ஓடுபாதையில் இருந்து பறக்க தயாரான துபாய் விமானம் மீது பறவை மோதியது.

மங்களூரு-

மங்களூரு விமான நிலையத்தில் ஓடுபாதையில் இருந்து பறக்க தயாரான துபாய் விமானம் மீது பறவை மோதியது. இதனால் அந்த விமான பயணம் ரத்து செய்யப்பட்டு மாற்று விமானத்தில் பயணிகள் துபாய் புறப்பட்டு சென்றனர்.

விமானம் மீது பறவை மோதியது

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பஜ்பே பகுதியில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை 8.30 மணி அளவில் மங்களூருவில் இருந்து 160 பயணிகளுடன் துபாய் நோக்கி 6E 1467 IXE-DXB என்ற இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டது.

அந்த விமானம் ஓடுபாதையில் சென்று பறக்க தயாரானது. அப்போது திடீரென்று விமானத்தின் இறக்கையில் பறவை ஒன்று மோதியது.

அவசரமாக திரும்பியது

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விமானி, உடனடியாக மங்களூருவில் உள்ள விமான கட்டுப்பாட்டு அறைக்கு (ஏர் டிராபிக் கண்ட்ரோல் ரூம்) தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அந்த விமானம் மங்களூரு விமான நிலையத்துக்கு வரவழைக்க அனுமதி அளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து அந்த விமானம் அவசரமாக மங்களூரு விமான நிலையத்துக்கு திரும்பி வந்தது. பின்னர் விமானத்தில் இருந்து பயணிகள் உடனடியாக இறக்கிவிடப்பட்டனர். அதன்பிறகு விமானத்தில் சேதம் ஏற்பட்டுள்ளதா என்று அதிகாரிகள் சோதனை செய்தனர்.

பரபரப்பு

இந்த நிலையில், மங்களூருவில் இருந்து காலை 9.10 மணி அளவில் பெங்களூருவுக்கு 165 பயணிகளுடன் புறப்பட இருந்த 6E 5347 என்ற இண்டிகோ விமானம், துபாய்க்கு மாற்றிவிடப்பட்டது. அந்த விமானம் 2 மணி நேரம் 35 நிமிடம் தாமதமாக காலை 11.05 மணிக்கு 160 பயணிகளுடன் மங்களூருவில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு சென்றது.

இதையடுத்து பெங்களூருவுக்கு செல்ல இருந்த 165 பயணிகளுக்கு விமான நிலையம் சார்பில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துபாய் விமானம் தாமதமாக சென்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினார்கள். இந்த விபத்து காரணமாக மங்களூரு விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் 22-ந்தேதி மங்களூரு அருகே நடந்த விமான விபத்தில் 158 பயணிகள் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story