பயங்கரவாதிகள்-தாதா கும்பல் தொடர்பு வழக்குநூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை


பயங்கரவாதிகள்-தாதா கும்பல் தொடர்பு வழக்குநூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை
x

பயங்கரவாதிகள்-போதை கடத்தல்காரர்கள்-தாதா கும்பல் நெருக்கம் தொடர்பான வழக்கில், என்.ஐ.ஏ. நேற்று அதிரடி சோதனை நடத்தியது.

புதுடெல்லி,

பயங்கரவாத இயக்கத்தினரும், அவர்களது ஆதரவாளர்களும் வடமாநிலங்களில் தீவிரமாக செயல்படும் தாதா கும்பல்களில் உறுப்பினர்களாக இருப்பது தெரிய வந்தது. அவர்கள் குறிவைத்து நடத்தப்படும் கொலைகளிலும், இதர குற்றவியல் செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதுபோல், இவர்களுக்கு போதைப்பொருள் கடத்தல்காரர்களுடனும் தொடர்பு இருப்பது தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) தெரிய வந்தது. போதைப்பொருள் கடத்தல், ஆயுதம், துப்பாக்கிகள், வெடிபொருட்கள் ஆகியவற்றை மாநிலம் விட்டு மாநிலம் கடத்துவதில் இக்கும்பல் ஒருவருக்கொருவர் உதவி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த ஆண்டு என்.ஐ.ஏ. 3 வழக்குகளை பதிவு செய்தது. பல்வேறு தாதா கும்பல்களை சேர்ந்த 19 பேரை கைது செய்தது. 2 ஆயுத கடத்தல்காரர்கள், ஒரு பைனான்சியர் ஆகியோரையும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் (உபா) கைது செய்தது.

இந்நிலையில், பயங்கரவாதிகள்-போதை கடத்தல்காரர்கள்-தாதா கும்பல் நெருக்கம் தொடர்பான வழக்கில், என்.ஐ.ஏ. நேற்று அதிரடி சோதனை நடத்தியது. அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய 6 மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது. இவ்வழக்கில் கடந்த ஆண்டும், இந்த ஆண்டு தொடக்கத்திலும் என்.ஐ.ஏ. பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி உள்ளது.


Next Story