திரைப்பட பாணியில்... புகார் அளித்த 1 மணிநேரத்தில் திருடனை விரட்டி பிடித்த பெண் துணை ஆய்வாளர்


திரைப்பட பாணியில்... புகார் அளித்த 1 மணிநேரத்தில் திருடனை விரட்டி பிடித்த பெண் துணை ஆய்வாளர்
x

டெல்லியில் திரைப்பட பாணியில், புகார் அளித்த 1 மணிநேரத்தில் பெண் துணை ஆய்வாளர் திருடனை விரட்டி பிடித்துள்ளார்.


புதுடெல்லி,



டெல்லியில் சூர் யமுனா பகுதியில் தனது ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு ரமேஷ் கர்காதி என்பவர் படித்துறைக்கு சென்று சடங்குகளை செய்துள்ளார். திரும்பி வந்து பார்த்த அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அவரது ஸ்கூட்டரை நிறுத்தி இருந்த இடத்தில் காணவில்லை.

இதுபற்றி திமர்பூர் காவல் நிலையத்திற்கு சென்று ரமேஷ் புகார் அளித்துள்ளார். அவர் ஸ்கூட்டரிலேயே தனது மொபைல் போனையும் வைத்து சென்றுள்ளார். இதனை அறிந்த காவல் துறையினர், பெண் துணை ஆய்வாளர் பிரீத்தி சைனி தலைமையில் விசாரணையில் ஈடுபட்டனர்.

அவர்கள் அனைவரும் சாதாரண உடையணிந்து பொதுமக்களுடன் ஒன்றாக கலந்து சென்று, வாகன திருட்டில் ஈடுபட்ட நபரை தேடினர்.

வாகனத்தில் இருந்த மொபைல் போனின் உதவியுடன் அதன் இருப்பிடம் கண்டறியப்பட்டது. ஐதர் ராஜா என்ற அந்த நபரை பின் தொடர்ந்தனர். உடன் ரமேசையும் அழைத்து சென்றனர்.

அவர்களுக்கு வடக்கு மாவட்ட கணினி பிரிவு போலீசாரும் வேண்டிய தகவல்களை அளித்தனர். ஸ்கூட்டர் சென்று கொண்டே இருந்துள்ளது. ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இடங்களில் நின்றுள்ளது.

அதன் இருப்பிடம் மாறி கொண்டே இருந்துள்ளது. எனினும், ஓரிடத்தில் வாகனம் நின்றது. தொடர்ந்து ராஜாவை விரட்டி வந்த போலீசார், வாகனத்தின் இருப்பிட பகுதியை நெருங்கினர். ரமேசும் தனது ஸ்கூட்டரை அடையாளம் காட்டியுள்ளார்.

இதன்பின்னர் ராஜா வரும்வரை மறைவாக அனைவரும் காத்திருந்தனர். அனைத்து பகுதிகளிலும் அவரை சுற்றி வளைத்தனர். கையில் பை ஒன்றுடன் திரும்பி வந்த ராஜா, ஸ்கூட்டரை ஓட்டி செல்ல முற்படும்போது, அவரை போலீசார் கைது செய்தனர். ரமேசின் மொபைல் போனும் மீட்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ராஜாவிடம் நடந்த விசாரணையில், சாலையோரம் நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்களை, அதற்காகவே வடிவமைக்கப்பட்ட தனது சாவியை கொண்டு திருடி வேறிடத்திற்கு சென்று அதன் பேட்டரிகளை ராஜா கழற்றி விடுவார் என தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புகார் அளித்த ஒரு மணிநேரத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனால், பெண் துணை ஆய்வாளர் சைனியை வடக்கு பகுதிக்கான போலீஸ் துணை கமிஷனர் சாகர் சிங் கால்சி பாராட்டி உள்ளார்.


Next Story