மைசூருவில் ஆன்லைன் மூலம் 2 பெண்களிடம் ரூ.2 லட்சம் மோசடி


மைசூருவில்  ஆன்லைன் மூலம் 2 பெண்களிடம் ரூ.2 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 6 July 2023 6:45 PM GMT (Updated: 6 July 2023 6:46 PM GMT)

மைசூருவில் ஆன்லைன் மூலம் 2 பெண்களிடம் ரூ.2 லட்சம் மோசடி சம்பவம் நடந்துள்ளது.

மைசூரு-

மைசூரு டவுன் சக்தி நகரை சேர்ந்தவர் சுதா ராணி (வயது 35). இவர் ஆன்லைனில் விளம்பரம் ஒன்றை பார்த்தார். அதில், வீட்டில் இருந்தே வேலை பார்க்கலாம் என இருந்தது. இதையடுத்து அதில் கேட்ட தகவல் அனைத்தையும் சுதா பதிவு செய்தார். அவரது எண்ணிற்கு மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார்.

அதில், வீட்டில் இருந்தே பணிபுரியலாம். அதற்கு முண்பணம் செலுத்த வேண்டும் என கூறினார். இதனை நம்பிய அவர் மர்மநபர் கூறிய வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணைகளாக ரூ.95 ஆயிரம் வரை அனுப்பி உள்ளார். இதையடுத்து சுதா அந்த நபரை தொடர்பு கொண்டார். ஆனால் அவரது எண் சுவிட்ச்-ஆப் என வந்தது. இதையடுத்து தான் ஏமாற்றபட்டதை சுதா உணர்ந்தார்.

இதேப்போல் வருணா அருகே சாயா லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் சீலா (42). இவரை மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அதில் பேசிய நபர் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் சம்பாதிக்கலாம் எனவும், அதற்கு முண்பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதனை நம்பிய சீலா பல்வேறு தவணைகளில் மர்மநபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.1 லட்சம் வரை அனுப்பி உள்ளார். இதையடுத்து சீலா மர்மநபர் எண்ணிற்கு தொடர்பு கொண்டார். அவரது எண் சுவிட்ச்- ஆப் என வந்தது. இந்த 2 புகார்களின் பேரில் மைசூரு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story