சொரப் தாலுகாவில் தொடர் அட்டகாசம் செய்த சிறுத்தை கூண்டில் சிக்கியது


சொரப் தாலுகாவில்   தொடர் அட்டகாசம் செய்த சிறுத்தை கூண்டில் சிக்கியது
x
தினத்தந்தி 30 April 2023 6:45 PM GMT (Updated: 30 April 2023 6:46 PM GMT)

சொரப் தாலுகாவில் தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது.

சிவமொக்கா-

சொரப் தாலுகாவில் தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது.

சிறுத்தை அட்டகாசம்

சிவமொக்கா மாவட்டம் சொரப் தாலுகாவில் குப்பே கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக குப்பே கிராமத்தில் சிறுத்தை ஒன்று நடமாடி வந்தது. இதனை அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அந்த சிறுத்தை கிராமத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி கொன்று தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தது. இதனால், பீதியடைந்த கிராம மக்கள், அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் குப்பே கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் இரும்பு கூண்டு ஒன்றை வைத்தனர்.

கூண்டில் சிக்கியது

மேலும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உணவு தேடி வெளியேறிய அந்த சிறுத்தை, வனத்துறையினர் வைத்த இரும்பு கூண்டுக்குள் வசமாக சிக்கிக் கொண்டது. அதில் சிறுத்தை காயம் அடைந்தது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் குப்பே மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் அங்கு திரண்டு வந்தனர். மேலும் வனத்துறையினர் மற்றும் கால்நடை டாக்டர்களும் விரைந்து வந்தனர். பின்னர் காயம் அடைந்த சிறுத்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பிடிபட்டது 3 வயது ஆண் சிறுத்தை ஆகும்.

கிராம மக்கள் நிம்மதி

கூண்டில் சிக்கியபோது அந்த சிறுத்தைக்கு காயம் ஏற்பட்டதால் அதற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பல்லாரி மாவட்டம் ஹம்பியில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் வன உயிரியல் பூங்காவிற்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார். தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியதால் அந்தப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


Next Story