தொழில் அதிபரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைதான வாலிபர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு
தொழில் அதிபரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைதான வாலிபர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
உடுப்பி;
தொழில் அதிபர் தற்கொலை
உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவை சேர்ந்தவர் கட்டி போஜண்ணா (வயது 79). தொழில் அதிபரான இவர், பொளஹள்ளியில் உள்ள பண்ணை வீட்டில் கடந்த 26-ந் தேதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து குந்தாப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர். மேலும் தொழில் அதிபர் கட்டி போஜண்ணா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கைப்பட எழுதிய கடிதம் போலீசாருக்கு சிக்கியது. அந்த கடிதத்தில் குந்தாப்புராவை சேர்ந்த கணேஷ் ஷெட்டி, இஸ்மாயில் தன்னிடம் ரூ.3.34 கோடி, 5 கிலோ தங்கத்தை கடனாக வாங்கியதாகவும், ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் திருப்பி தராததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்வதாக கூறியிருந்தார். இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து கட்டி போஜன்னாவை தற்கொலைக்கு தூண்டிய 2 பேரையும் வலைவீசி தேடிவந்தனர்.
சிறையில் அடைப்பு
இந்த நிலையில் கணேஷ் ஷெட்டியை போலீசார் கைது செய்தனர். நேற்று அவரை உடுப்பி மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது விசாரணை நடத்திய நீதிபதி கைதான கணேஷ் ஷெட்டிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து அவரை போலீசார் சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள இஸ்மாயிலை வலைவீசி தேடி வருகின்றனர்.