நடிகை சேத்தனா ராஜ் மரண வழக்கில் அறுவை சிகிச்சை செய்த டாக்டரிடம் விசாரணை; நகையை அடகு வைத்ததும் அம்பலம்
நடிகை சேத்தனா ராஜ் மரண வழக்கில் அறுவை சிகிச்சை செய்த டாக்டரிடம் போலீஸ் விசாரணை நடக்க உள்ளது.மேலும் நகையை அடகு வைத்ததும் அம்பலமாகியுள்ளது.
பெங்களூரு: பெங்களூரு புறநகர் மாவட்டம் வீரேனபாளையா கிராமத்தை சேர்ந்தவர் சேத்தனா ராஜ். சின்னத்திரை நடிகையான இவர், கடந்த 16-ந் தேதி ராஜாஜிநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல் பருமனை குறைக்க, கொழுப்பு அறுவை சிகிச்சை செய்தார். அப்போது அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். நடிகை சேத்தனா ராஜ் மரணம் குறித்து, அவரது தந்தை வரதராஜ் கொடுத்த புகாரின் பேரில் சுப்பிரமணியநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை சேத்தனா ராஜ் இயற்கைக்கு மாறாக மரணம் அடைந்திருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது சாவில் சந்தேகம் இருப்பதால், விசாரணைக்கு ஆஜராகும்படி, அவருக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் மற்றும் தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகத்திற்கு சுப்பிரமணியநகர் போலீசார் நோட்டீசு அனுப்பி வைத்திருந்தார்கள். மேலும் நடிகை சேத்தனா ராஜ், பிரேத பரிசோதனை மாதிரிகள் தடயவியல் ஆய்வுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், போலீசார் நோட்டீசு அனுப்பியதை தொடர்ந்து நேற்று சுப்பிரமணியநகர் போலீஸ் நிலையத்தில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் ஷெட்டி மற்றும் ஊழியர்கள் ஆஜரானார்கள். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர். அதே நேரத்தில் நடிகை சேத்தனா ராஜின் பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் அறிக்கை கிடைத்ததும் மீண்டும் டாக்டர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இதற்கிடையில், சேத்தனா ராஜ் தனது தங்க நகையை அடகு வைத்து தான் அறுவை சிகிச்சை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அறுவை சிகிச்சை செய்வதற்கு சேத்தனா ராஜின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக தனது நகையை ரூ.80 ஆயிரத்திற்கு அடகு வைத்து அவர் அறுவை சிகிச்சை செய்தது தெரியவந்துள்ளது.