சட்டசபை தேர்தலையொட்டி அதிரடி மேற்கு மண்டலத்தில் ரவுடிகளின் வீடுகளில்
பெங்களூருவில் சட்டசபை தேர்தலையொட்டி மேற்கு மண்டலத்தில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது 20 ரவுடிகள் சிக்கினார்கள். அவர்களது வீடுகளில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பெங்களூரு:-
சட்டசபை தேர்தல் பாதுகாப்பு
கர்நாடக சட்டசபை தேர்தலை எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் அமைதியான முறையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பெங்களூருவில் சட்டசபை தேர்தலுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
மேற்கு மண்டல சட்டம் ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் உத்தரவின் பேரில் மத்திய மண்டலம், வடக்கு மண்டலம், தெற்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் வசிக்கும் ரவுடிகளின் வீடுகளில் துணை போலீஸ் கமிஷனர் மேற்பார்வையில் இந்த சோதனை நடத்தப்பட்டு இருந்தது. சுமார் 300-க்கும் மேற்பட்ட ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினார்கள்.
20 ரவுடிகள் சிக்கினர்
அப்போது சட்டசபை தேர்தலின் போது எந்த விதமான அசம்பாவிதங்களிலும் ஈடுபடக்கூடாது, குறிப்பிட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி பொதுமக்களை மிரட்டுவது, சட்டசபை தேர்தலையொட்டி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என்று ரவுடிகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தார்கள். சோதனையின் போது ரவுடிகளின் வீடுகளில் இருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. குறிப்பாக பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 20-க்கும் மேற்பட்ட ரவுடிகளுக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு இருந்தும், கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்தனர். இதையடுத்து, சோதனையின் போது சிக்கிகய 20 ரவுடிகளையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.