சுதந்திர தினத்தில் நடந்த கலவரத்தில் கத்தியால் குத்தப்பட்ட துணி வியாபாரி மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி
சிவமொக்காவில் சுதந்திர தினத்தில் நடந்த கலவரத்தில் கத்தியால் குத்தப்பட்ட துணி வியாபாரி மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டார்.
சிவமொக்கா;
சிவமொக்கா டவுன் அமீர் அகமது சதுக்கத்தில் ஜவுளிக்கடை நடத்தி வந்தவர் பிரேம்சிங். கடந்த மாதம் (ஆகஸ்டு) 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று சிவமொக்கா நகரில் வைக்கப்பட்டிருந்த வீரசாவர்க்கரின் படத்துடன் இருந்து பேனரை அகற்றியதால் அந்த பகுதியில் கலவரம் ஏற்பட்டது.
அப்போது பிரேம்சிங் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்மநபர்கள் 2 பேர், பிரேம்சிங்கின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து அவரை கத்தியால் குத்தி விட்டு சென்றனர். இதையடுத்து பிரேம்சிங் சிவமொக்கா அரசு மெக்கான் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர் 15 நாட்கள் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் மீண்டும் நேற்றுமுன்தினம் பிரேம்சிங்குக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்ட வயிற்று பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டது. இதனால் அவரை குடும்பத்தினர் சிவமொக்கா அரசு மெக்கான் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.