வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறும் சதானந்த கவுடா எம்.பி. நம்பிக்கை


வருகிற நாடாளுமன்ற தேர்தலில்  பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறும்  சதானந்த கவுடா எம்.பி. நம்பிக்கை
x
தினத்தந்தி 24 Jun 2023 12:15 AM IST (Updated: 24 Jun 2023 2:54 PM IST)
t-max-icont-min-icon

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறும் என சதானந்த கவுடா எம்.பி கூறினார்.

மைசூரு-

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறும் என சதானந்த கவுடா எம்.பி கூறினார்.

ஆலோசனை கூட்டம்

மைசூருவில் மாவட்ட பா.ஜனதா கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு புறநகர் மாவட்ட பா.ஜனதா தலைவர் மங்கள சோமசேகர் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் முதல்-மந்திரியும் எம்.பி.யுமான சதானந்த கவுடா, மத்திய மந்தரி ஷோபா, முன்னாள் மந்திரி வி.சோமண்ணா, ஸ்ரீவத்ஷா எம்.எல்.ஏ., பிரதாப் சிம்ஹா எம்.பி. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஹர்ஷவர்தன், எல்.நாகேந்திரா, முன்னாள் எம்.பி., சி.எச்.விஜய சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பா.ஜனதா எம்.எல்.ஏ. ஸ்ரீவத்ஷாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதில் முன்னாள் முதல்-மந்திரி சதானந்த கவுடா பேசுகையில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

வெற்றி பெற பாடுபட வேண்டும்

இதனை கண்டு பா.ஜனதா தொண்டர்கள், பிரமுகர்கள் சோர்வடைய கூடாது. கர்நாடகத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜனதா கட்சி வெற்றி பெற பாடுபட வேண்டும். அதற்கு இப்போது இருந்தே மக்களிடம் மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களை கூற வேண்டும். பா.ஜனதாவில் உட்கட்சி பூசல் உள்ளது. இதனால் தான் காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, என்றார். பின்னர் கூட்டம் முடிந்து வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது முன்னாள் முதல்-மந்திரி சதானந்த கவுடா கூறுகையில்,

காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றுள்ளது. அவர்கள் 5 உத்தரவாத திட்டங்களை அளிப்பதாக கூறினர். ஆனால் தற்போது அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் திட்டம் மட்டுமே அமல் படுத்தப்பட்டுள்ளது.

பஸ்களில் கூட்ட நெரிசல்

மற்ற திட்டங்கள் எப்போது அமலுக்கு வரும் என்பது தெரியவில்லை. இதில் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக செல்கிறார்கள். ஆனால் அதிக இடங்களில் கூட்டம் நெரிசல் காரணமாக தகராறு ஏற்பட்டு வருகிறது. மேலும் அரசு பஸ் கிடைக்காமல் பெண்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.இலவச திட்டத்தால் கர்நாடக போக்குவரத்து கழகத்திற்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை வரும். காங்கிரஸ் கட்சி இலவச திட்டங்கள் அறிவித்து மக்களை ஏமாற்றி உள்ளது. இதனால் மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

திணறி வருகிறது

மாநில அரசிற்கு வழங்கும் அரிசியை மத்திய அரசு வழங்கி வருகிறது.

ஆனால் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறிய ரேஷன் கார்டுதாரர்களுக்கு 10 கிலோ இலவச அரிசியை கொடுக்க முடியாமல் திணறி வருகிறது. இதனால் மாநில அரசு மத்திய அரசு மீது பழிபோடுகிறது. மின்சார கட்டணத்தை உயர்த்தி வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் வழங்குவதாக காங்கிரஸ் அரசு கூறி வருகிறது, என்றார்.


Next Story