உடுப்பியில், 3 நாட்கள் மாம்பழம் கண்காட்சி நிறைவு பெற்றது; ரூ.30 லட்சத்திற்கு விற்பனையானது
உடுப்பியில் நடந்த 3 நாட்கள் மாம்பழம் கண்காட்சி நேற்று நிறைவடைந்தது. ரூ.30 லட்சத்திற்கு மாம்பழம் விற்பனை செய்யப்பட்டதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மங்களூரு;
உடுப்பி மாம்பழம் கண்காட்சி
உடுப்பி மாவட்டம் தொட்டனகுடேயில் 3 நாட்கள் மாம்பழ கண்காட்சி கடந்த 22-ந்தேதி தொடங்கியது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், மாவட்ட பஞ்சாயத்து, தோட்டக்கலைத்துறை செய்து இருந்தது.
இதில் ராமநகர், உடுப்பியை சேர்ந்த 20 மாம்பழ உற்பத்தியாளர்கள் மற்றும் உள்ளூர் விவசாயிகள் வந்து மாம்பழ விற்பனையில் ஈடுபட்டனர். இங்கு காட்சிபடுத்தப்பட்டிருந்த பலவகை மாம்பழத்தை வாங்க பொதுமக்கள் திரண்டனர்.
பலவகை மாம்பழம்
அதில் 3 நாட்களும் பலவகை மாம்பழங்களை மக்கள் பணம் கொடுத்து வாங்கி சென்றனர். மாம்பழ கண்காட்சியின் கடைசி நாளான நேற்று ஏராளமான மக்கள் குவிந்து மாம்பழங்களை வாங்கி சென்றனர். இந்த கண்காட்சியில் கலந்து கொண்ட ராமநகர் மாவட்டத்தை சேர்ந்த மாம்பழ விவசாயிகள் கூறியதாவது:-
ராமநகரில் 40 ஆயிரம் ஹெக்டேரில் மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. இயற்கை முறையில் தான் அனைத்து மாம்பழங்களையும் உற்பத்தி செய்கிறோம். சுமார் 30 டன் மாம்பழங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது.
ரூ.30 லட்சம்...
இந்த கண்காட்சி மூலம் நேரடி விற்பனை செய்ய முடிந்தது. வாடிக்கையாளர்களுக்கும் குறைந்த விலையில் மாம்பழங்களை வாங்கி செல்வதற்கு கண்காட்சி உதவியாக இருக்கிறது. கடந்த 3 நாட்கள் நடந்த இந்த கண்காட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பிலான 28 டன் மாம்பழங்கள் விற்பனையாகியுள்ளது. இது ஒரு நல்ல முயற்சி. உடுப்பியை தொடர்ந்து மங்களூருவிலும் இதேபோன்று மாம்பழம் கண்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதிலும் கலந்து கொள்வோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.