உடுப்பியில் ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ.6¼ லட்சம் சிகரெட் பறிமுதல்
உடுப்பியில் ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ.6¼ லட்சம் மதிப்பிலான சிகரெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மங்களூரு-
உடுப்பியில் ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ.6¼ லட்சம் மதிப்பிலான சிகரெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
வாகன சோதனை
கர்நாடகத்தில் மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநில முழுவதும் ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லும் பணம், பரிசு பொருட்களை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் உடுப்பி மாவட்டம் மணிப்பால் மற்றும் படுபித்ரி பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
இந்நிலையில் படுபித்ரி போலீஸ் சரகத்திற்குட்பட்ட காபு தாலுகா ஹெஜமாடி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனை நடத்தியபோது, ஒரு வாகனத்தில் வெளி நாட்டு சிகரெட்டுகள் எடுத்து செல்வது தெரியவந்தது. அந்த வெளி நாட்டு சிகரெட்டுகளின் மதிப்பு ரூ.4 லட்சத்து 79 ஆயிரம் என்று கூறப்படுகிறது.
ஆவணங்கள் இல்லை
இந்த சிகரெட்டுகளை எடுத்து செல்வதற்கான ஆவணங்களை போலீசார், கார் டிரைவரிடம் கேட்டனர். அதற்கு அவர் எந்த ஆவணமும் இல்லை என்று கூறினார். இதையடுத்து போலீசார் கார் மற்றும் அதில் எடுத்து செல்லப்பட்ட சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து படுபித்ரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதேப்போல் மணிப்பாலில் சட்டவிரோதமாக வெளி நாட்டு சிகரெட்டுகளை பதுக்கி வைத்து, அதை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மணிப்பால் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது 2 கடைகளில் வெளி நாட்டு சிகரெட்டுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
ரூ.1½ லட்சம் சிகரெட் பறிமுதல்
இதையடுத்து அந்த கடைகளில் இருந்து ரூ.1½ லட்சம் மதிப்பிலான 113 தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டுகள் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான வெளி நாட்டு சிகரெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து மணிப்பால் போலீசாா் வழக்கு பதிவு செய்தனர். மொத்தம் 2 போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.6 லட்சம் 34 ஆயிரம் மதிப்பிலான வெளி நாட்டு சிகரெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.