விஜயாப்புராவில், 6 மணி நேர இடைவெளியில் 2 முறை நிலநடுக்கம்


விஜயாப்புராவில், 6 மணி நேர இடைவெளியில் 2 முறை நிலநடுக்கம்
x

விஜயாப்புராவில் நேற்று முன்தினம் ஒரே இரவில் 6 மணிநேர இடைவெளியில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

விஜயாப்புரா; விஜயாப்புராவில் நேற்று முன்தினம் ஒரே இரவில் 6 மணிநேர இடைவெளியில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

2 முறை நிலநடுக்கம்

கர்நாடகத்தின் வடகர்நாடக மாவட்டமான விஜயாப்புராவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் விஜயாப்புராவில் டவுன், பசவபேகவாடி மனகுலி மற்றும் திக்கோடு தாலுகாக்களில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் இருந்த வீடுகளில் பொருட்கள் கீழே விழுந்தன. ரிக்டர் அளவில் நிலநடுக்கம் 2.8 என்ற அளவில் பதிவானது. விஜயாப்புராவின் கோல் கும்பாஸ் பகுதியில் இதன் தாக்கம் தீவிரமாக உணரப்பட்டது.

இதைதொடர்ந்து நேற்று அதிகாலை 4.40 மணிக்கு மீண்டும் அந்த பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரே இரவில் 2 முறை தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் விஜயாப்புரா மாவட்ட மக்கள் பீதியில் உள்ளனர். அப்போது ரிக்டர் அளவில் 2.5-ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது விஜயாப்புரா தாலுகா ஹன்சினளாவை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. பயங்கர சத்தத்துடன் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து உடனடியாக மாநில இயற்கை பேரிடர் மேலாண்மை மையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

பீதி அடைய வேண்டாம்

அதை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், நிலநடுக்கம் 2 முறை ஏற்பட்டதை உறுதி செய்தனர். மேலும், அவர்கள் கூறுகையில் விஜயாப்புராவில் இந்த மாத தொடக்கத்தில் ஒரு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த மாதத்தில் மட்டும் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் நிலநடுக்கம் குறித்து மக்கள் யாரும் பீதி அடைய தேவையில்லை.

ரிக்டர் அளவில் குறைந்த அளவில் நிலநடுக்கம் பதிவானதால், பாதிப்புகள் பெரிதாக இருக்காது என்றனர். எனினும், நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story