இம்மாத இறுதிக்குள் தயாராகி விடும் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா எப்போது?


இம்மாத இறுதிக்குள் தயாராகி விடும் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா எப்போது?
x
தினத்தந்தி 17 May 2023 5:15 AM IST (Updated: 17 May 2023 5:15 AM IST)
t-max-icont-min-icon

தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 100 ஆண்டுகள் பழமையானது. இடநெருக்கடியாகவும் உள்ளது.

புதுடெல்லி,

தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 100 ஆண்டுகள் பழமையானது. இடநெருக்கடியாகவும் உள்ளது. எனவே, புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. 'சென்டிரல் விஸ்டா' மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய நாடாளுமன்றம் கட்டப்படுகிறது. ஜனாதிபதி மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரையிலான 3 கி.மீ. சாலையை மறுசீரமைத்தல், பொதுவான மத்திய செயலகம், பிரதமருக்கு புதிய இல்லம், அலுவலகம், துணை ஜனாதிபதிக்கு புதிய இல்லம் ஆகியவை கட்டுவதும் 'சென்டிரல் விஸ்டா' மறுசீரமைப்பு திட்டத்தில் அடங்கும். புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிக்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மொடி அடிக்கல் நாட்டினார். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்குள் கட்டுமான பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால், அந்த இலக்கை தாண்டி விட்டது. கட்டிடத்துக்கு இறுதி வடிவம் அளிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. சிவில் கட்டமைப்புகளை தூய்மைப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி, வருகிற 28-ந் தேதி திறந்து வைப்பார் என்று நேற்று தகவல்கள் வெளியாகின. மோடி அரசின் 9-வது ஆண்டு நிறைவையொட்டி, 30-ந் தேதி திறக்கப்படலாம் என்றும் பேசப்பட்டது.

ஆனால், திறப்பு விழா தேதி பற்றி மத்திய அரசு அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. இம்மாத இறுதிக்குள் கட்டிடம் தயாராகி விடும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

டாடா புராஜக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் கட்டி வரும் புதிய நாடாளுமன்றத்தில், பிரமாண்டமான மண்டபம், எம்.பி.க்கள் ஓய்வெடுக்கும் பகுதி, நூலகம், பல்வேறு குழுக்களின் அறைகள், உணவருந்தும் பகுதிகள், விசாலமான வாகன நிறுத்துமிடம் ஆகியவை இடம்பெறுகின்றன.


Next Story