காங்கிரஸ் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை
பெங்களூரு, பாகல்கோட்டை, கலபுரகி மாவட்டங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் வீடு, அலுவலகங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் ரூ.2.85 கோடி ரூபாய் ரொக்கம், ஆவணங்கள் சிக்கி உள்ளது.
பெங்களூரு:-
தொழில்அதிபர்கள் வீடுகளில்...
கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடக்க உள்ளது. சட்டசபை தேர்தல் சூடுபிடித்திருப்பதுடன், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளதால், வாக்காளர்
களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.20 கோடிக்கு நகை, பணத்தை பறிமுதல் செய்திருந்தனர்.
இந்த நிலையில், பெங்களூரு, பாகல்கோட்டை கலபுரகி, ஹாவேரி உள்ளிட்ட மாவட்டங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள், தொழில்அதிபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகா இலகல்லில் உள்ள தொழில்அதிபர்களான ராஜு போரே உள்ளிட்ட 2 பேரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருந்தார்கள்.
ரூ.2.85 கோடி சிக்கியது
அந்த 2 பேரும், அரசியல் கட்சியின் வேட்பாளரிடம் இருந்து பணத்தை வாங்கி பதுக்கி வைத்திருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அந்த 2 தொழில்அதிபர்களின் வீடுகளில் இருந்து பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கி இருந்தது. இதுபோல், ஹாவோ மாவட்டம் பேடகியில் காங்கிரஸ் வேட்பாளரின் ஆதரவாளரான சென்னபசப்பா வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
அப்போது அவரது வீட்டில் இருந்து ரூ.2.85 கோடி சிக்கியது. அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் சென்ன பசப்பாவிடம் இல்லை. இதையடுத்து, ரூ.2.85 கோடி மற்றும் சில ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்து சென்றுள்ளனர். பெங்களூருவில் காங்கிரஸ் வேட்பாளரின் நெருங்கிய ஆதரவாளரான ஹரிரெட்டிக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி, ஆவணங்களை கைப்பற்றி பரிசீலனை நடத்தி வருகிறார்கள்.
பிரியங்க் கார்கே ஆதரவாளர்
இதுபோல், முன்னாள் முதல்-மந்திரியான எஸ்.எம். கிருஷ்ணாவின் சகோதரி சுனிதா வீட்டிலும் வருமான வரி அதிகாரிகள் சோதனையை நேற்றும் தொடர்ந்தனர். சுனிதா கோரமங்களாவில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களாக நடந்த சோதனை நேற்றும் தொடர்ந்தது. அவரது வீட்டில் எவ்வளவு பணம் சிக்கியது என்பது சோதனை முடிந்த பிறகு தான் தெரியவர உள்ளது.
இதுபோல், கலபுரகி மாவட்டம் சித்தாப்புரா தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான பிரியங்க் கார்கேவின் ஆதரவாளான அரவிந்த் அவுராத் வீடு, அலுவலகம், ஓட்டல், கல்குவாரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். நேற்று முன்தினத்தில் இருந்தே இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அவரது வீட்டில் சிக்கிய பணம், ஆவணங்கள் பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை.
பா.ஜனதாவில் இருந்து விலகி...
இதற்கிடையில், சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால், என்னுடைய ஆதரவாளர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு இருப்பதாகவும், காங்கிரஸ் கட்சியினரை குறி வைத்தே வருமான வரி சோதனை நடத்துவதாகவும், அரவிந்த் அவுராத் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்துள்ளதால், அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பதாக பிரியங்க் கார்கே குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நலையில், காங்கிரஸ் வேடபாளர்களின் ஆதரவாளர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.