பி.பி.சி. அலுவலகங்களில் வருமான வரித்துறை 2-வது நாளாக சோதனை


பி.பி.சி. அலுவலகங்களில் வருமான வரித்துறை 2-வது நாளாக சோதனை
x

பி.பி.சி. அலுவலகங்களில் வருமான வரித்துறை 2-வது நாளாக சோதனை நடத்தியது. இது பழிவாங்கும் நடவடிக்கை என அரசியல் தலைவர்கள் சாடி உள்ளனர்.

புதுடெல்லி,

குஜராத் மாநிலத்தில் 2002-ம் ஆண்டு நடந்த இனக்கலவரங்கள் தொடர்பாக பி.பி.சி. நிறுவனம் 'இந்தியா: மோடி மீதான கேள்வி' என்ற பெயரில் 2 ஆவணப்படங்களை தயாரித்து வெளியிட்டது. அவற்றில், குஜராத் இனக்கலவரங்களில் பிரதமர் மோடிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இந்த ஆவணப்படங்களை வெளியிட மத்திய அரசு கடந்த 21-ந் தேதி அதிரடியாக தடை விதித்தது. இதற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்து, அவை நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் டெல்லி, மும்பையில் உள்ள பி.பி.சி. நிறுவன அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனைகளை நடத்தியது அதிர வைத்தது. வரி ஏய்ப்பு விசாரணையின் அங்கமாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பு கூறியது.

அதே நேரத்தில் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து வருவதாக பி.பி.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

2-வது நாளாக சோதனை

இந்த நிலையில், அங்கு வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்தது.

பி.பி.சி. அலுவலகத்தின் நிதி மற்றும் முக்கிய துறைகளின் ஊழியர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதன் மற்றொரு பகுதியாக சில கணினி சாதனங்கள் மற்றும் மொபைல் போன்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றின் பதிவுகள் நகல் எடுக்கப்பட்டன.

இந்த சோதனைக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அது வருமாறு:-

பழிவாங்கும் நடவடிக்கை

மம்தா பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்):-

இது பா.ஜ.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். இது துரதிர்ஷ்டவசமானது. இத்தகைய செயல்கள், பத்திரிகை சுதந்திரத்தை பாதித்து விடும். ஒரு நாள், நாட்டில் ஊடகமே இருக்காது. அவர்கள் (பா.ஜ.க.வினர்) மக்களின் ஆணை பற்றி கவலைப்படுவதில்லை. அவர்களது ஒரே ஆணை சர்வாதிகாரம்தான். அவர்கள் ஹிட்லரை விட மோசமானவர்கள்.

அரவிந்த் கெஜ்ரிவால் (ஆம் ஆத்மி கட்சி தலைவர்):-

ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகம். அதன் குரலை அடக்குவது, பொதுமக்களின் குரலை ஒடுக்குவது போன்றதாகும். பா.ஜ.க.,வுக்கு எதிராக யார் பேசினாலும், அவர்கள் சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரத்துறையினர் ஆகியோரை அனுப்பி விடுகின்றனர். நாட்டின் ஜனநாயக அமைப்பையும், நிறுவனங்களையும் நசுக்கி ஒட்டுமொத்த நாட்டையும் அடிமையாக்க பா.ஜ.க விரும்புகிறதா?

மெகபூபா முப்தி (மக்கள் ஜனநாயக கட்சி தலைவர்):-

பி.பி.சி. நிறுவனம் மீதான சோதனை நடவடிக்கை, உலகம் முழுவதும் நாட்டின் பிம்பத்தை இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளது. இது போன்ற செயல்கள், நாட்டை ஜனநாயகத்தின் தாய் என்று கூறுவதையே கேள்விக்குள்ளாக்குகிறது.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.


Next Story