காய்கறி, மின்கட்டணம், பால் விலை அதிகரிப்பால் ஓட்டல்களில் உணவுகள் விலை உயர்வு


காய்கறி, மின்கட்டணம், பால் விலை அதிகரிப்பால் ஓட்டல்களில் உணவுகள் விலை உயர்வு
x
தினத்தந்தி 24 July 2023 4:45 AM GMT (Updated: 24 July 2023 4:52 AM GMT)

பெங்களூருவில் மின் கட்டணம், காய்கறி, பால் விலை அதிகரிப்பு காரணமாக ஓட்டல்களில் உணவுகள் விலை 10 சதவீதம் உயர்த்தப்படுவதாக ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:-

தக்காளி விலை அதிகரிப்பு

கர்நாடகத்தில் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விலை உயர்வு ஆகஸ்டு 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதே நேரத்தில் தக்காளி உள்ளிட்ட காய்கறி விலையும் உயர்ந்து விட்டது. தக்காளி விலை ரூ.100-ஐ தாண்டி விற்பனையாகிறது. ஏற்கனவே காங்கிரஸ் அரசு அமைந்த பின்பு மாநிலம் முழுவதும் மின் கட்டணத்தையும் அரசு உயர்த்தி இருந்தது. அதுபோல், வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது.

அத்துடன் அரிசி, பருப்பு, உளுந்து விலையும் சமீபத்தில் உயர்ந்திருந்தது. இதுபோன்ற காரணங்களால் பெங்களூருவில் ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலையை உயர்த்த ஓட்டல் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். காய்கறி, பால், மின் கட்டணம் உயர்வால் தற்போது நகரில் உள்ள பெரும்பாலான ஓட்டல்கள் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும், ஓட்டல்களை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

10 சதவீதம் விலை உயருகிறது

இதன் காரணமாக பெங்களூருவில் ஓட்டல்களில் உணவுகளின் விலையை 10 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை ஆகஸ்டு 1-ந் தேதியில் இருந்து அமல்படுத்த ஓட்டல் உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் பி.சி.ராவ் கூறியதாவது:-

ஓட்டல்களுக்கு தேவையான காய்கறி, அரிசி உள்ளிட்டவற்றின் விலையும், பால், மின் கட்டணத்தையும் அரசு உயர்த்தி இருக்கிறது. ஓட்டல்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள், ஊழியர்களுக்கும் சம்பளம் அதிகமாக வழங்கப்படுகிறது. ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் ஓட்டல்களில் உணவுகளின் விலையை அதிகமாக உயர்த்தாமலும், ஓட்டல் உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணமும் 10 சதவீதம் மட்டுமே விலையை உயர்த்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story