கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு; வினாடிக்கு 42,747 கனஅடி தண்ணீர் செல்கிறது
நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 42,747 கனஅடி தண்ணீர் தமிழகம் நோக்கி செல்கிறது.
மைசூரு:
நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணையின் நீர்பிடிப்பு பகுதியாக குடகிலும், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டையில் உள்ள கபினி அணையின் நீர்பிடிப்பு பகுதியான கேரள மாநிலம் வயநாட்டிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், 2 அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. ஏற்கனவே கடந்த ஆகஸ்டு மாதம் பெய்த கனமழையால் கே.ஆர்.எஸ்., கபினி அணைகள் நிரம்பின.
வினாடிக்கு 42,747 கனஅடி
அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், பாதுகாப்பை கருதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் 124.54 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 33,620 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 40,747 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் 2,282.53 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 42,747 கனஅடி தண்ணீர் அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி செல்கிறது.