பா.ஜ.க.வின் பாசிச ஆட்சிக்கு எதிராக இந்தியா கூட்டணி தொடர்ந்து போராடும் - மல்லிகார்ஜுன கார்கே
பா.ஜ.க.வுக்கும், அவர்களின் வெறுப்பு, ஊழல் அரசியலுக்கும் மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
புதுடெல்லி,
இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் இன்று மாலை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு மல்லிகாஜுன கார்கே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எங்கள் கூட்டணிக்கு கிடைத்த அமோக ஆதரவிற்கு இந்தியா கூட்டணியின் அங்கத்தினர்கள் மற்றும் இந்திய மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பா.ஜ.க.வுக்கும், அவர்களின் வெறுப்பு, ஊழல் அரசியலுக்கும் மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். இது பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் மற்றும் தார்மீக தோல்வியாகும்.
இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கும் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் முதலாளித்துவத்துக்கு எதிராகவும், ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்குமான ஆணையாகும். மோடி தலைமையிலான பா.ஜ.க.வின் பாசிச ஆட்சிக்கு எதிராக இந்தியா கூட்டணி தொடர்ந்து போராடும். பா.ஜ.க. ஆட்சி அமையக் கூடாது என்ற மக்களின் விருப்பத்தை உணர்ந்து உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுப்போம். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். இதுவே எங்களுடைய முடிவு. இவ்வாறு அவர் கூறினார்.