கிழக்கு லடாக் கோக்ரா ஹாட்ஸ்பிரிங் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய - சீன படைகள் முற்றிலும் விலகல்!


கிழக்கு லடாக் கோக்ரா ஹாட்ஸ்பிரிங் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய - சீன படைகள் முற்றிலும் விலகல்!
x

கிழக்கு லடாக் கோக்ரா ஹைட்ஸ் - ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் இருந்து இந்தியா, சீனா படைகள் திரும்பப்பெறும் நடவடிக்கைகள் நிறைவடைந்துவிட்டன.

புதுடெல்லி,

இந்தியா - சீனா ராணுவ கமாண்டர்கள் இடையே நடந்த 16-வது சுற்று பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கிழக்கு லடாக் எல்லையின் கோக்ரா - ஹாட்ஸ்பிரிங் பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கைகள் கடந்த வாரம் தொடங்கப்பட்டன.

ஜம்மு காஷ்மீரின் லடாக் அருகே கல்வான் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு இரு நாடுகளும், எல்லையில் படைகளை குவித்தன. இதனால், லடாக் எல்லையில் கடந்த 2 ஆண்டுகளாக பதற்றமான சூழல் நிலவிவந்தது.

இந்நிலையில், 16-வது சுற்று பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கிழக்கு லடாக் எல்லையில் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் கோக்ரா - ஹாட்ஸ்பிரிங் எல்லையில் இந்தியா, சீனா படைகள் தங்களது ராணுவத்தினரை திரும்பப் பெறும் நடவடிக்கைகளை தொடங்கின. இந்த படை விலகல் பணிகள் நேற்றுடன் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, கிழக்கு லடாக் செக்டாரில் ரோந்துப் புள்ளி-15க்கு அருகில் உள்ள கோக்ரா ஹைட்ஸ்-ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் இருந்து இந்தியா, சீனா படைகள் முற்றிலும் திரும்பப் பெறும் நடவடிக்கைகள் நிறைவடைந்துவிட்டன.

இப்பகுதியில் உருவாக்கப்பட்ட அனைத்து தற்காலிக கட்டமைப்புகள் மற்றும் பிற தொடர்புடைய உள்கட்டமைப்புகள் அகற்றப்பட்டு விட்டதாகவும், அதனை இருநாட்டு ராணுவமும் உறுதி செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story