இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே 9 ஆண்டுகளுக்கு பின் சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை மீண்டும் தொடக்கம்!


இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே 9 ஆண்டுகளுக்கு பின் சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை மீண்டும் தொடக்கம்!
x

இது இந்தியாவின் மிக முக்கியமான சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் ஒன்றாக இருக்கும்.

பிரஸ்ஸல்ஸ் [பெல்ஜியம்],

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே 9 வருட அமைதிக்குப் பிறகு சுதந்திர வர்த்தக பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது. பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் நிர்வாக துணைத் தலைவர் வால்டிஸ் டோம்ப்ரோவ்ஸ்கிஸ் ஆகியோர் 'இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (எப்.டி.ஏ)) பேச்சுவார்த்தைகளை முறைப்படி மீண்டும் தொடங்கினர்.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாகும். இதன் காரணமாக, இது இந்தியாவின் மிக முக்கியமான சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் ஒன்றாக இருக்கும்.

இது தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஆணையர் வால்டிஸ் டோம்ப்ரோவ்ஸ்கிஸ் கூறுகையில், "சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்களை இன்று இந்தியாவுடன் மீண்டும் தொடங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜூன் 27 முதல் ஜூலை 1 வரை புதுடெல்லியில் நடைபெறும். நாங்கள் ஒரு லட்சிய காலக்கெடுவைப் பின்பற்றி வருகிறோம், 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் பேச்சுவார்த்தைகளை முடிக்க இலக்கு வைத்துள்ளோம்.

இந்த தொலைநோக்கு பேச்சுவார்த்தைகள் ஐரோப்பிய ஒன்றிய-இந்தியா உறவுகளில் ஒரு புதிய மற்றும் அற்புதமான அத்தியாயத்தைத் திறக்கின்றன. ஒன்றாக நாங்கள் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை உருவாக்கத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், எங்கள் பகிரப்பட்ட மதிப்புகளை மேம்படுத்துவது, காலநிலையைப் பாதுகாப்பது மற்றும் எங்கள் விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பது ஆகியவற்றையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.

வர்த்தக ஒப்பந்தங்கள், முதலீடு மற்றும் அதிக கூட்டாண்மை ஆகியவற்றில் நமது நட்பு மற்றும் நம்பிக்கையை விரிவுபடுத்துவதற்காக இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒன்றிணைவது இயற்கையானது. இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள வணிகங்கள் மற்றும் மக்களுக்கு வாய்ப்புகளை வழங்கும் லட்சிய காலக்கெடுவை சந்திப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார்.


Next Story