நெருக்கடியான நேரத்தில் இலங்கைக்கு முடிந்தவரை இந்தியா உதவி வருகிறது - ராஜ்நாத் சிங்
அண்டை நாடுகளுடன் இந்தியா நட்புறவை விரும்புவதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
கொல்கத்தா,
கொல்கத்தாவில் ஹூக்ளி ஆற்றில் 17ஏ போர்க்கப்பல் இன்று பணியில் ஈடுபடுத்தப்பட்டது. பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங் கூறுகையில், " அண்டை நாடுகளுடன் இந்தியா நட்புறவை விரும்புகிறது. இதற்காக இந்தியா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. மியான்மர், பூட்டான், வங்காளதேசம் நேபாளம், மாலத்தீவு, இலங்கை போன்ற அண்டை நாடுகளுடன் நாம் வலுவான உறவைப் பேணி வருகிறோம்.
குறிப்பாக இலங்கை கடந்து வரும் கடினமான காலங்களை நாம் அனைவரும் அறிவோம். கொரோனா தொற்று மற்றும் உக்ரைன் போர் நம்மையும் பாதித்துள்ளது. இருந்த போதிலும் அங்கு நிலவும் நெருக்கடியான சூழ்நிலையிலும் நாம் முடிந்த அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு செய்து வருகின்றோம்.
இவ்வாறு அவர் பேசினார்.