சுகாதார அச்சுறுத்தல்களுக்கு உலகளாவிய நடவடிக்கை தேவை - ஜெனீவா மாநாட்டில் மத்திய மந்திரி பேச்சு
சுகாதார அச்சுறுத்தல்களுக்கு ஒருங்கிணைந்த உலகளாவிய நடவடிக்கை அவசியம் என்பதை கொரோனா உணர்த்தி விட்டது என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி கூறினார்.
புதுடெல்லி,
ஜெனீவாவில், 76-வது உலக சுகாதார மாநாடு நடந்து வருகிறது. அதில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-
சுகாதார அச்சுறுத்தல்கள் ஒரு நாட்டுடன் மட்டும் தொடர்புடையவை அல்ல. அவற்றை ஒடுக்க ஒருங்கிணைந்த உலகளாவிய நடவடிக்கை அவசியம் என்பதை கொரோனா உணர்த்தி விட்டது.
இதை கருத்தில்கொண்டு, சுகாதார பணியாளர்களின் திறன்களை அதிகரிக்கும் நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தியது. அது இந்தியாவுக்கு பலன் அளித்துள்ளது.
தரமான சிகிச்சை
'இந்தியாவால் குணமடைவோம்' என்ற முயற்சியின் கீழ், உலகின் பல பகுதிகளுக்கு இந்திய சுகாதார பணியாளர்களை அனுப்பி வைத்து சேவை செய்தோம். 'உலகமே ஒரு குடும்பம்' என்ற இந்திய தத்துவப்படி இதை செய்தோம்.
'இந்தியாவில் குணமடைவோம்' என்ற முயற்சியின் கீழ், உலகம் முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு இந்தியாவில் உலகத்தரமான, மலிவான, தரமான சிகிச்சையை அளித்ேதாம்.
220 கோடி தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி திட்டத்தில் இந்தியா கற்பனை செய்ய முடியாத வேகத்தில் செயல்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 220 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. பல லட்சம் தடுப்பூசிகள், உலக நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய அரசாங்க மருத்துவ காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டம், 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒன்றரை லட்சம் ஆயுஷ்மான் பாரத் நல்வாழ்வு மையங்கள், சிறப்பான சிகிச்சை வசதிகளை அளித்து வருகின்றன என்று அவர் பேசினார்.