இந்தியாவில் 12 ஆயிரத்திற்கும் குறைவான சீன ஸ்மார்ட்போன்களை விற்க விரைவில் தடை? -வெளியான தகவல்
கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசு அவ்வப்போது குறிப்பிட்ட சீன செயலிகளை தடை செய்து வருகிறது.
புதுடெல்லி,
உள்நாட்டு சந்தையை மேம்படுத்தும் விதமாக 12 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக விற்கப்படும் சீன நிறுவன ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விற்க விரைவில் தடை விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கையை மத்திய அரசு அமல் படுத்தும் பட்சத்தில் இந்தியாவில் சீன ஸ்மார்ட்போன்களின் விற்பனை பெரும் பாதிப்பை சந்திக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகிலேயே இரண்டாவது மிக பெரிய மொபைல் சந்தையாக இந்தியா திகழ்கிறது. ஆனால் உள்நாட்டு தயாரிப்பு ஸ்மார்ட்போன்களின் விற்பனையை, சீன நிறுவனங்கள் ஓப்போ, விவோ ரியல்மி, டிரான்சியன் நிறுவனங்கள் குறைத்து வருவதாக கவலை தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு, இந்திய சீன எல்லையில் இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் பத்துக்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதை தொடர்ந்து சீன நிறுவனங்கள் மீது இந்தியா அழுத்தத்தை அதிகரித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசு அவ்வப்போது குறிப்பிட்ட சீன செயலிகளை தடை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.