உணவு உற்பத்தியை பெருக்கி உலகத்துக்கு உதவுவோம் - மன்சுக் மாண்டவியா


உணவு உற்பத்தியை பெருக்கி உலகத்துக்கு உதவுவோம் - மன்சுக் மாண்டவியா
x

கோப்புப்படம்

உணவு உற்பத்தியை பெருக்கி உலகத்துக்கு உதவுவோம் என்று உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் மன்சுக் மாண்டவியா உறுதியளித்தார்.

டாவோஸ்,

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார கூட்டமைப்பின் வருடாந்திர மாநாடு நடைபெற்று வருகிறது. நேற்று அம்மாநாட்டில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா பங்கேற்றார். அங்கு அவர் பேசியதாவது:-

இந்தியா, வேற்றுமைகள் கொண்ட பெரிய நாடு. ஏறத்தாழ பாதி மக்கள்தொகை, வேளாண்மையை சார்ந்து உள்ளது. விவசாயிகளுக்கு வேளாண் செலவை குறைத்து, வருவாயை பெருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். உரம் மலிவு விலையில் கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். உற்பத்தியை பெருக்க விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை கடைபிடிக்க உதவி வருகிறோம். அவர்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அளித்து வருகிறோம்.

இந்தியா மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடு. எங்கள் உணவு தானிய தேவையே மிகவும் அதிகம். இருப்பினும், நாங்கள் உணவு தானிய உற்பத்தியை பெருக்குவோம். உலக உணவு பிரச்சினையை சமாளிக்க சாத்தியமான அனைத்து உதவிகளும் அளிக்க உறுதி பூண்டுள்ளோம். மற்ற நாடுகளும் இதுபோல் உதவ வேண்டும்.

இந்தியா ஒரு பொறுப்பான நாடு. உலகத்தையே ஒரு குடும்பமாக பார்ப்பதுதான் இந்திய தத்துவம் என்பதால், ஊரடங்கு காலத்தில் கூட உலகத்துக்கு தடுப்பூசிகளையும், மருந்துகளையும் அளித்தோம். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story