ஸ்மார்ட்போன்களில் 5ஜி சேவையை பயன்படுத்தும் வகையில் விரைவில் மென்பொருள் அப்டேட்..!
பெரும்பாலான 5ஜி ஸ்மார்ட்போன்களில் அதற்கான மென்பொருள் அப்டேட் அளிக்கப்படவில்லை.
புதுடெல்லி,
5ஜி தொலைத்தொடர்பு சேவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இன்னும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில்(5ஜி சேவை பொருந்தக்கூடிய போன்கள் மட்டும்) அதற்கான மென்பொருள் அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படவில்லை.
தசரா பண்டிகையை முன்னிட்டு மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் சோதனை அடிப்படையிலான 5ஜி சேவையை தொடங்கப்பட்டுள்ளதாக ஜியோ அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த 4 நகரங்களில் ஜியோவின் ட்ரு 5G பீட்டா சேவை, 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5ஜி சேவைகளைப் பெற புதிய சிம் தேவையில்லை எனவும் ஜியோ தெரிவித்துள்ளது.
அதேபோல, சென்னை, பெங்களூர், மும்பை, பெங்களூரு, ஐதராபாத், சிலிகுரி, நாக்பூர், வாரணாசி ஆகிய நகரங்களில் ஏர்டெல் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், 5ஜி மொபைல் வைத்திருக்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அனைவரும், சிம் கார்டை மாற்றாமல், 4ஜி கட்டணத்திலேயே 5 ஜி சேவையை பயன்டுத்தலாம் எனவும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆப்பிள், சாம்சங் உள்பட பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களில் 5ஜி-ஐ ஆதரிக்கும் மென்பொருள் இல்லை. ஏர்டெல் நிறுவனத்தின் இணையதளம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 5ஜி தொழில்நுட்பத்திற்கான மென்பொருளை அனைத்து ஐபோன்களுக்கும்(5ஜி சேவை பொருந்தக்கூடிய போன்கள் மட்டும்) ஆப்பிள் நிறுவனம் இன்னும் புதுப்பிக்கவில்லை என தெரிவித்துள்ளது.
இதனையடுத்து இந்தியாவின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் உயர் அதிகாரிகள் புதன்கிழமை ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் வெளிநாட்டு நிறுவனங்களான ஆப்பிள், சாம்சங், விவோ மற்றும் சியோமி மற்றும் உள்நாட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ், ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவற்றின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
இக்கூட்டத்தில் 5ஜி அதிவேக இணையதள சேவையை மொபைல் போன்களில் அளிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட மென்பொருள் அப்டேட் விரைவில் வெளியிடுவது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
குறிப்பிட்ட 5ஜி தொழில்நுட்பம் மொபைல்போன்களில் வழங்குவதற்கான மேம்படுத்தப்பட்ட மென்பொருள் அப்டேட் வெளியிடுவதற்கு கால அவகாசம் எடுக்கும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை நிபுணர் கூறினார்.