தென்மேற்கு பருவமழை இயல்பான அளவு பெய்யும்-இந்திய வானிலை மையம் தகவல்


தென்மேற்கு பருவமழை இயல்பான அளவு பெய்யும்-இந்திய வானிலை மையம் தகவல்
x

தென்மேற்கு பருவ மழை இயல்பான அளவுக்கு பெய்யும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

புதுடெல்லி,

ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் தங்கள் பயிர் சாகுபடிக்கு பெரிதும் நம்பி இருப்பது பருவமழையைத்தான். பருவமழை பொய்த்துப்போகிறபோது அது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. ஏனென்றால் 52 சதவீத சாகுபடி நிலங்கள், பருவமழையைத்தான் நம்பி உள்ளன.இந்த ஆண்டு பருவமழை வழக்கத்தை விட குறைவான அளவே இருக்கும் என்று தனியார் வானிலை மையமான 'ஸ்கைமெட்' தெரிவித்தது. இது விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஆனால் விவசாயிகள் நிம்மதிப்பெருமூச்சு விடவைக்கும் தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை, இயல்பான அளவுக்கு பெய்யும் என்று அது அறிவித்துள்ளது. எல்நினோ நிலைமைக்கு மத்தியிலும் மழை இயல்பான அளவு இருக்கும்.

இந்தியாவில் தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக பருவமழை இயல்பான அளவுக்கு பெய்துள்ளது.

இந்திய புவி அறிவியல்கள் துறை அமைச்சகத்தின் செயலாளர் எம்.ரவிச்சந்திரன், பருவமழை தொடர்பாக டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், "இந்தியாவில் தென்மேற்கு பருவமழைக்காலத்தில் (ஜூன்-செப்டம்பர்) இயல்பான அளவுக்கு மழை பெய்யும். இது தோராயமான நீண்ட கால சராசரியான 96 சதவீதமாக (இதில் 5 சதவீதம் தவறலாம்) இருக்கும்" என தெரிவித்தார்.

இந்திய வானிலை மையத்தின் தலைமை இயக்குனர் மிருதியுஞ்சய் மொகபத்ரா கூறியதாவது:-

இயல்பு முதல் இயல்புக்கு மேல் மழை பெய்வதற்கு 67 சதவீதம் வாய்ப்பு உள்ளது. வடமேற்கு, மேற்கு-மத்தி, வடகிழக்கு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காலத்தில் இயல்பு முதல் இயல்புக்கு மேல் மழை பெய்யும்.தீபகற்ப பகுதியின் பல இடங்களிலும், கிழக்கு-மத்திய, கிழக்கு, வடகிழக்கு பகுதிகள் மற்றும் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளிலும் இயல்பான மழை பெய்யக்கூடும். ஜூலை மாதத்தில் எல் நினோ நிலைகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மழைக்காலத்தின் இரண்டாம் பாதியில் அவற்றின் தாக்கம் உணரப்படலாம். எல்லா எல்-நினோ ஆண்டுகளும் மோசமான பருவமழை ஆண்டுகள் என்று கூறி விட முடியாது. 1951 மற்றும் 2022 ஆண்டுகளுக்கு இடையில் 15 எல் நினோ ஆண்டுகள் இருந்தன. அவற்றில் 6 பருவ மழைக்காலத்தில் இயல்பு மற்றும் இயல்புக்கு மேல் பருவமழை பெய்தது இவ்வாறு அவர் கூறினார்.

50 ஆண்டு சராசரியான 87 செ.மீட்டரில் 96 சதவீதம் முதல் 104 சதவீதம் வரையிலான மழை இயல்பான மழை அளவாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story