சர்வதேச வேளாண் பொருட்கள் உற்பத்தி மையம் ஆக இந்தியா விரைவில் திகழும்; பிரதமர் மோடி பேச்சு

இந்தியா, சர்வதேச அளவில் வேளாண் பொருட்கள் உற்பத்தி மையம் ஆக விரைவில் திகழும் என டெல்லியில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி விவசாயம் சார்ந்த பல நல திட்டங்களை டெல்லியில் இன்று தொடங்கி வைத்து உள்ளார். இதன்படி, பிரதம மந்திரி கிசான் சம்மன் சம்மேளனம் 2022 என்ற திட்டத்தினை அவர் தொடங்கி வைத்து உள்ளார்.
இதேபோன்று, ஒரே நாடு ஒரே உரம் என்ற அடிப்படையிலான பிரதம மந்திரி பாரதீய ஜன ஊர்வரக் பரியோஜனா திட்டம் ஒன்றையும் அவர் தொடங்கி வைத்து உள்ளார். இந்நிகழ்ச்சியில் மத்திய வேளாண் மந்திரி தோமர் மற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன்பின்பு, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், கட்சியினர் கலந்து கொண்ட பொது கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசும்போது, பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் நாடு முழுவதுமுள்ள விவசாயிகளுக்கு 12-வது தவணையாக ரூ.16 ஆயிரம் கோடி நிதி அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் தரம் நிறைந்த உரம் வழங்கப்படும் என கூறினார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, உரங்களின் தரம் மற்றும் உற்பத்தி தொழில் நுட்பத்தில் மிக பெரிய உருமாற்றம் நடந்துள்ளது. இதனால், வேளாண் பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும். பயிர் சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படும். இந்தியா, சர்வதேச அளவில் வேளாண் பொருட்கள் உற்பத்தி மையம் ஆக விரைவில் திகழும் என குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசியுள்ளார்.