அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேருவதற்கான விவரங்கள் வெளியீடு!


அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேருவதற்கான விவரங்கள் வெளியீடு!
x

அக்னிபத் திட்டத்தின் கீழ், ஆட்சேர்ப்பு குறித்த விவரங்களை இந்திய விமானப்படை வெளியிட்டது.

புதுடெல்லி,

ராணுவத்துக்கு ஆள் சேர்க்க 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில், அக்னிபாத் திட்டத்தின் கீழ், ஆட்சேர்ப்பு குறித்த விவரங்களை இந்திய விமானப்படை வெளியிட்டது. அதில் சேருவதற்கான தகுதி, கல்வித் தகுதி, மருத்துவத் தரநிலைகள், மதிப்பீடு, விடுப்பு, ஊதியம், ஆயுள் காப்பீட்டுத் தொகை போன்றவற்றை விமானப்படை வெளியிட்டுள்ளது.

மறுமுனையில், இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டக்காரர்களை அமைதிப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில், ஜூன் 24-ம் தேதி இந்த செயல்முறை தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானப்படை வெளியிட்ட சில விவரங்கள் பின்வருமாறு:-

அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர்க்கப்படும் அக்னிவீரர்களுக்கு, அவர்களுடைய பணிக் காலத்தின் போது ரூ.48 லட்சம் வரையிலான ஆயுள் காப்பீடு வழங்கப்படும்.

18 வயதுக்குட்பட்டவர்களும் இதில் சேரலாம். ஆனால், அவர்களின் சேர்க்கை படிவத்தில் தங்கள் பெற்றோரால் கையொப்பமிடப்பட வேண்டும்.

சிறப்பான பணியாற்றும் அக்னிவீரர்களுக்கு கவுரவம் அளிக்கப்படும் மற்றும் உரிய விருதுகளும் அளிக்கப்படும்.

பணிக் காலத்தின் போது, விமானப்படை அக்னிவீரர்களுக்கென ஒரு தனித்துவமான அடையாளத்துடன் கூடிய சீருடை வழங்கப்படும்.

அக்னிவீரர்களுக்கான உயர்தர ஆன்லைன் தரவுத்தளத்தை விமானப்படை பராமரிக்கும். அதில் வீரர்களின் தனித்தன்மை மற்றும் திறமை உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்படும்.

அக்னிவீரர்களுக்கு ஓர் ஆண்டுக்கு 30 நாட்கள் விடுமுறை காலம் அளிக்கப்படும் மற்றும் மருத்துவ ஆலோசனையின் அடிப்படையில் மருத்துவ விடுப்பும் கிடைக்கும்.

நான்கு ஆண்டுகள் முடிவதற்குள் அக்னிவீரர்கள் தங்கள் சொந்த கோரிக்கையின் பேரில் விடுவிக்கப்பட மாட்டார்கள். ஆனால் அதிலும் சில விதிவிலக்குகள் உள்ளன.

இவ்வாறு இந்திய விமானப்படை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்னிபத் திட்டம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story