இந்திய கடற்படை 2047 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக தன்னிறைவு பெறும் - கடற்படைத் தலைமைத் தளபதி
இந்திய கடற்படை 2047 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக தன்னிறைவு பெறும் என்று கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் தெரிவித்தார்.
புதுடெல்லி:
இந்திய பாதுகாப்பு மாநாடு 2022 நேற்று புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் பேசிய கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் கூறியதாவது,
கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிப்பில் இருந்து உதிரி பாகங்கள் மற்றும் ஆயுதங்கள் வரை, இந்திய கடற்படை 2047 ஆம் ஆண்டுக்குள் "முழுமையாக" தன்னிறைவு பெறும்.
தற்போது நடந்து வரும் ரஷ்யா-உக்ரைன் மோதலில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல், ஒருவரின் நாட்டைக் காக்க 'ஆத்மநிர்பார்' (தன்னம்பிக்கையுடன் இருப்பது) அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
வரும் 2047-க்குள், கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானங்கள், ஆயுதங்கள் என ஒரு முழுமையான உள்நாட்டு கடற்படையை இந்திய கடற்படை பெறும். நாங்கள் முற்றிலும் 'ஆத்மநிர்பார்' கடற்படையாக இருப்போம். அதைத்தான் நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம்.
1961 ஆம் ஆண்டில் இந்திய கடற்படை தனது "இந்தியமயமாக்கல் இயக்கத்தை" மேற்கொண்டது, முதல் சிறிய ரோந்துப் படகு ஐ.என்.எஸ். அஜய், இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. அதற்குப் பிறகு இந்திய கடற்படை நிறைய முன்னேறியுள்ளது என்று அவர் கூறினார்.