அமெரிக்கா: பூங்காவில் காரில் அமர்ந்திருந்த இந்தியர் சுட்டுக்கொலை - அதிர்ச்சி சம்பவம்
அமெரிக்காவில் உள்ள பூங்காவில் காரில் அமர்ந்திருந்த நபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க்,
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. துப்பாக்கி கலாசாரத்தை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் மேரிலெண்ட் மாகாணத்தில் உள்ள பூங்காவில் காரில் அமர்ந்திருந்த இந்தியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேரிலெண்ட் மாகாணம் குயின்ஸ் நகரில் உள்ள தெற்கு ஓசோன் பூங்காவில் கடந்த சனிக்கிழமை மாலை 4 மணியளவில் இந்தியரான சத்னம் சிங் ஒரு காரில் அமர்ந்திருந்தார். அந்த கார் தனது நண்பரிடமிருந்து வாங்கிகொண்டு சதனம் பூங்கா பகுதிக்கு வந்துள்ளார்.
அப்போது, அங்கு மற்றொரு காரில் வந்த சிலர் பூங்காவில் காரில் இருந்த சதனம் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சதனம் சிங்கை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சதனம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த துப்பாக்கிச்சூடு சதனம் சிங்கை குறிவைத்து நடத்தப்பட்டதா? அல்லது காரின் உண்மையான உரிமையாளருக்கு குறிவைக்கப்பட்டு அதில் சதனம் சிக்கிக்கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.