உக்ரைன் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு; அரசு தகவல்
உக்ரைன் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு, சர்வதேச நிதிநிலை இறுக்கம் ஆகியவற்றால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சமீபத்தில் சரிந்தது என அரசு தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சமீபத்தில் ரூ.80 என்ற அளவில் சரிந்தது. இந்த நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய நிதி துறைக்கான இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி கேள்வி ஒன்றிற்கு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு கண்டதற்கு சர்வதேச காரணிகளான ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் சர்வதேச நிதிநிலை நெருக்கடி ஆகியவையே பெரிய அளவிலான காரணங்கள் ஆகும் என தெரிவித்து உள்ளார்.
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்த போதிலும், இங்கிலாந்து நாட்டின் பவுண்டு, ஜப்பான் நாட்டின் யென் மற்றும் யூரோ ஆகியவற்றுக்கு எதிராக நடப்பு ஆண்டில் வலுவான நிலையிலேயே இருந்தது என அவர் கூறியுள்ளார்.
முந்தின ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு ஆண்டின் ஒவ்வொரு மாதமும் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்தபடியே உள்ளது என அவர் தெரிவித்து உள்ளார். இந்திய ரூபாயின் இந்த சரிவானது வர்த்தக பற்றாக்குறையில் அழுத்தம் ஏற்படுத்துகிறது.
இதனால், இறக்குமதியை அதிக செலவு ஏற்படுத்தும் ஒன்றாக உயர்த்தி வருகிறது. தொடர்ச்சியாக உள்நாட்டிற்கு திரும்பும் அதிக பணவீக்க அழுத்தம், கொள்கை வகுப்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு விலை அதிகரித்து நுகர்வு மற்றும் தேவை ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படுத்துகிறது என்று அவர் தெரிவித்து உள்ளார்.