இந்திய மாணவர்கள் ரஷியாவில் படிப்பைத் தொடரலாம்: தூதரக அதிகாரி தகவல்


இந்திய மாணவர்கள் ரஷியாவில் படிப்பைத் தொடரலாம்: தூதரக அதிகாரி தகவல்
x

உக்ரைனில் இருந்து படிப்பை பாதியில் விட்டு திரும்பிய இந்திய மாணவர்கள், ரஷிய பல்கலைக்கழகங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று ரஷிய தூதரக அதிகாரி கூறினார்.

திருவனந்தபுரம்,

கடந்த பிப்ரவரி மாதம், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. அதையடுத்து, அங்கு படித்துக் கொண்டிருந்த 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்திய மாணவர்கள், இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். உக்ரைனில் இன்னும் போர் நீடிப்பதால், அவர்கள் திரும்பி செல்ல முடியவில்லை.

அதனால், அவர்கள் தங்கள் படிப்பை தொடர முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இந்தநிலையில், டெல்லியில் உள்ள ரஷிய தூதரகத்தின் உயர் அதிகாரி ரோமன் பாபுஸ்கின் நேற்று கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்துக்கு வந்தார். அப்போது, இந்திய மாணவர்களின் படிப்பு குறித்து நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு ரோமன் பாபுஸ்கின் கூறியதாவது:-

உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள், ரஷிய பல்கலைக்கழகங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். தங்களது முந்தைய கல்வி ஆண்டுகளை இழக்காமல், அவர்கள் அதே படிப்பை தொடரலாம் என்று அவர் கூறினார்.

திருவனந்தபுரத்தில் உள்ள ரஷிய இல்லத்தின் உயர் அதிகாரி ரதீஷ் சி.நாயர் கூறியதாவது:-

உக்ரைனில் இருந்து திரும்பிய கேரள மாணவர்கள், இந்த ரஷிய இல்லத்தை தங்களது மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட ஆவணங்களுடன் தொடர்பு கொள்ளலாம். அவை ரஷிய பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து மாணவர்களையும், அவர்களுடைய பெற்றோரையும் தொடர்பு கொள்வார்கள். ஆனால், உக்ரைனில் செலுத்திய கல்வி கட்டணம், ரஷியாவில் போதாது. ஒருவேளை உக்ரைனில் மாணவர்கள் கல்வி உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) பெற்றிருந்தால், அது ரஷிய பல்கலைக்கழகங்களில் ஏற்றுக்கொள்ளப்பட வாய்ப்புள்ளது.


Next Story