அரசியல் வேறுபாடுகளை கடந்து இந்தியாவை உயர்த்த பாடுபட வேண்டும் - ராம்நாத் கோவிந்த் அறிவுறுத்தல்
நான் பணியாற்ற அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினர் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.
புதுடெல்லி,
டெல்லி, நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா பேசும் போது,
ராம்நாத் மக்களின் ஜனாதிபதியாக திகழ்ந்தார். சமூகத்தில் பின் தங்கிய மக்களுக்காக பாடுபட்டவர். பெண்களின் முன்னேற்றத்தில் ராம்நாத் பங்களிப்பு அளப்பறியது என்றார்.
இதன் பின்னர் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:
5 ஆண்டுகளுக்கு முன்பு பார்லிமென்ட் மைய மண்டபத்தில் ஜனாதிபதியாக பதவியேற்றேன். அனைத்து எம்.பி.,க்களுக்கும் எனது இதயத்தில் சிறப்பான இடம் உண்டு. எனது பணிக்காலம் முழுவதும் நினைவில் இருக்கும்.
ஜனாதிபதியாக பணியாற்ற வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எம்.பி.,க்களுடன் பணியாற்றியது மறக்க முடியாதது. ஜனாதிபதியாக எனது பங்களிப்பை சிறப்பாக வழங்கி உள்ளேன். ஆதரவு அளித்த பிரதமர் மற்றும் எம்.பி.,க்கள் அனைவருக்கும் நன்றி. அம்பேத்கரின் கனவை நனவாக்க முயற்சி செய்தேன். கொரோனாவை கட்டுப்படுத்தியதற்காக இந்தியாவை அனைத்து நாடுகளும் புகழ்கின்றன. அரசியல் வேறுபாடுகளை கடந்து இந்தியாவை உயர்த்த பாடுபட வேண்டும். எல்லாவற்றையும் விட நாடு பெரியது என்ற உணர்வுடன் பணியாற்ற வேண்டும். இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரவுபதி முர்முவை மனதார வாழ்த்துகிறேன். அவரது வழிகாட்டுதலால் நாடு பயனடையும்.
இவ்வாறு ராம்நாத் கோவிந்த் பேசினார்.