இந்தியாவில் முதல் முறையாக ஓட்டுநர் இல்லாத 'பாட் டேக்சி' சேவை - உத்தர பிரதேசத்தில் செயல்படுத்த திட்டம்


இந்தியாவில் முதல் முறையாக ஓட்டுநர் இல்லாத பாட் டேக்சி சேவை - உத்தர பிரதேசத்தில் செயல்படுத்த திட்டம்
x

உத்தர பிரதேசத்தில் அமையவிருக்கும் ‘பாட் டேக்சி’ வழித்தடம் தான் உலகிலேயே நீளமான வழித்தடம் என்று கூறப்படுகிறது.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தில் ஆசியாவின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையமான 'ஜெவார் விமான நிலையம்' கட்டப்பட்டு வருகிறது. இது உலகின் 4-வது மிகப்பெரிய விமான நிலையமாக விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த ஜெவார் விமான நிலையத்தை நொய்டா பிலிம் சிட்டியுடன் இணைக்கும் வகையில், ஓட்டுநர் இல்லாத 'பாட் டேக்சி' சேவையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சாலைப் போக்குவரத்தை கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் உதவி செய்யும் அதிநவீன போக்குவரத்து சேவையாக 'பாட் டேக்சி' சேவை பார்க்கப்படுகிறது. கடந்த 1975-ம் ஆண்டு, அமெரிக்காவில் உள்ள மோர்கன் டவுன் நகரில் முதல் முறையாக 'பாட் டேக்சி' சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த டேக்சி சேவையானது ஓட்டுநர் இல்லாமல், முழுவதும் மின்சாரத்தில் இயங்குகிறது.

உலக அளவில் வெறும் 5 நிறுவனங்கள் மட்டுமே 'பாட் டேக்சி' வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அதே போல் உலக அளவில் வெறும் 8 நாடுகளில் மட்டுமே இந்த 'பாட் டேக்சி' சேவை நடைமுறையில் உள்ளது. இந்த டேக்சியில் ஒரே நேரத்தில் 4 முதல் 6 பயணிகள் வரை பயணிக்கலாம். பாட் டேக்சிகள் பயணிக்க தனி வழித்தடப் பாதை அமைக்கப்பட வேண்டும் என்ற நிலையில், சில நாடுகளில் அவர் மேலே மெட்ரோவைப் போல் பயணிக்கும் விதத்திலும் அமைந்துள்ளன.

தற்போது இங்கிலாந்து, துபாய், சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் 'பாட் டேக்சி' சேவை அமலில் உள்ள நிலையில், இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் அமையவிருக்கும் 'பாட் டேக்சி' வழித்தடம் தான் உலகிலேயே நீளமான வழித்தடம்(சுமார் 14.1 கி.மீ.) என்று கூறப்படுகிறது. இந்த திட்டத்திற்கு உத்தர பிரதேச அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




Next Story