இண்டிகோ விமானத்தில் பணிப்பெண்ணிடம் பாலியல் சீண்டல்; சுவீடன் நாட்டு முதியவர் கைது


இண்டிகோ விமானத்தில் பணிப்பெண்ணிடம் பாலியல் சீண்டல்; சுவீடன் நாட்டு முதியவர் கைது
x

இண்டிகோ விமானத்தில் பணிப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சுவீடன் நாட்டு முதியவர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

பாங்காங் நகரில் இருந்து மும்பை நோக்கி இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இதில் பல்வேறு நாட்டு பயணிகள் இருந்தனர்.

இந்த நிலையில், விமானத்தில் பணிப்பெண்ணிடம் சுவீடன் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளார் என கூறப்படுகிறது. இதுபற்றி மும்பை விமான நிலையத்திற்கு விமானம் வந்து இறங்கியதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்படி விமான ஊழியர்கள் அந்த நபரை பிடித்து, மும்பை போலீசிடம் ஒப்படைத்தனர். அவரிடம் நடந்த விசாரணையில், சுவீடன் நாட்டை சேர்ந்த கிலாஸ் எரிக் ஹரால்டு ஜோனாஸ்ம் (வயது 63) என தெரிய வந்து உள்ளது.

இதனை தொடர்ந்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதற்காக அவர் மீது இண்டிகோ விமான நிறுவனம் அளித்த புகாரின் பேரில் மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து எரிக் ஹரால்டை அந்தேரி கோர்ட்டில் நேற்று ஒப்படைத்தனர்.

இந்த வழக்கில், அந்தேரி கோர்ட்டில் குற்றப்பத்திரிகை ஒன்றை போலீசார் நேற்று சமர்ப்பித்தனர். எனினும், அவருக்கு நேற்றே ஜாமீன் வழங்கப்பட்டு விட்டது என்று போலீசார் இன்று தெரிவித்து உள்ளனர். எனினும், தொடர்ந்து இந்த வழக்கில் விசாரணை செய்து வருகிறோம் என்று போலீசார் கூறியுள்ளனர்.

கடந்த மார்ச் 9-ந்தேதி கொல்கத்தா நகரில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த இண்டிகோ விமானம் ஒன்று, தரையிறங்க 30 நிமிடங்கள் இருக்கும்போது, விமான கழிவறையை ஊழியர் சோதனை செய்து உள்ளார்.

குப்பை தொட்டியில் சிகரெட் துண்டு ஒன்று எரிந்த நிலையில் கிடந்து உள்ளது கண்டறியப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக உடனடியாக தண்ணீர் ஊற்றி அதனை ஊழியர் அணைத்து உள்ளார்.

கொல்கத்தாவின் சீல்டா பகுதியை சேர்ந்த பிரியங்கா சக்ரவர்த்தி என்ற 24 வயது இளம்பெண் விமானத்தின் கழிவறையில் புகைப்பிடித்த பின் எரிந்த நிலையிலான மீதமுள்ள சிகரெட் துண்டை போட்டு போயுள்ளார் என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு இண்டிகோ விமானம் வந்து இறங்கியதும் பிரியங்காவை போலீசிடம் ஒப்படைத்து உள்ளனர். விமானத்தில் பிற பயணிகள் உள்ளிட்டோரின் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்து விளைவித்து உள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்தனர்.

அதன்பின்னர், அந்த இளம்பெண்ணை காவலுக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் பற்றி முழு அளவில் விசாரணையும் நடத்தப்பட்டது.

கடந்த மார்ச் 23-ந்தேதி துபாயில் இருந்து மும்பை நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில் பயணித்த 2 பேர் குடிபோதையில் ஊழியர்களிடம் தவறாக நடக்க முயன்றனர்.

இந்த சம்பவத்தில் தத்தாத்ரேயா ஆனந்த் பப்பார்டேகர் மற்றும் ஜான் ஜார்ஜ் டிசோசா ஆகிய இருவரையும் மும்பை நகரின் சஹார் பகுதி போலீசார் கைது செய்து உள்ளனர்.

மும்பை போலீசின் துணை காவல் ஆணையாளர் தீட்சித் கெதம் கூறும்போது, கைது செய்யப்பட்டபோதும், அவர்களுக்கு காவல் நிலையத்தில் ஜாமீன் கொடுக்கப்பட்டு விட்டது என கூறினார்.


Next Story