குடிபோதையில் இண்டிகோ விமானத்தில் ஊழியர்களிடம் தவறாக நடந்த பயணிகள்; போலீசார் வழக்கு பதிவு
குடிபோதையில் இண்டிகோ விமானத்தில் ஊழியர்களிடம் தவறாக நடந்து கொண்ட பயணிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
புனே,
துபாயில் இருந்து மும்பை நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில் பயணித்த 2 பேர் குடிபோதையில் ஊழியர்களிடம் தவறாக நடக்க முயன்ற விவகாரம் தெரிய வந்து உள்ளது.
இந்த சம்பவத்தில் அடையாளம் காணப்பட்ட பயணிகள் தத்தாத்ரேயா ஆனந்த் பப்பார்டேகர் மற்றும் ஜான் ஜார்ஜ் டிசோசா ஆகிய இருவரையும் மும்பை நகரின் சஹார் பகுதி போலீசார் கைது செய்து உள்ளனர்.
இதுபற்றி மும்பை போலீசின் துணை காவல் ஆணையாளர் தீட்சித் கெதம் கூறும்போது, குடிபோதையில் ஊழியர்களிடம் தவறாக நடக்க முயன்ற சம்பவத்தில் அவர்கள் முறைப்படி கைது செய்யப்பட்டனர்.
இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 21, 22 மற்றும் 25-ன் கீழ் இண்டிகோ விமான பயணிகள் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த சட்ட பிரிவுகளின்படி அவர்களுக்கு காவல் நிலையத்தில் ஜாமீன் கொடுக்கப்பட்டு விட்டது என கூறியுள்ளார்.
சம்பவத்தின்படி, துபாயில் இருந்து மும்பை நோக்கி இண்டிகோ விமானம் ஒன்று நேற்று புறப்பட்டு வந்து உள்ளது. அதில் மேற்குறிப்பிட்ட 2 பேரும், விமானம் புறப்பட்டதும் மதுபானம் குடிக்க தொடங்கி உள்ளனர்.
இதனை கவனித்த விமான ஊழியர்கள், விமானத்தின் உள்ளே மதுபானம் குடிக்க தடை செய்யப்பட்ட விவரங்களை எடுத்து கூறியுள்ளனர். ஆனால், குடிபோதையில் இருவரும் ஆத்திரத்தில், இருக்கைகளில் இருந்து எழுந்து உள்ளனர்.
இதன்பின்னர், விமானத்தில் குடித்தபடியே நடந்து சென்று உள்ளனர். விமான ஊழியர்களிடம் மற்றும் சக பயணிகளிடமும் தவறாக நடந்து கொண்டனர் என கூறப்படுகிறது. இதுபற்றி விமான நிறுவனம் அளித்த புகாரின் பேரில் 2 பயணிகள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்து உள்ளனர்.