அடி உதை.. சூடு வைத்து சித்ரவதை: தங்கையுடன் போனில் பேசிய பெண்ணுக்கு கணவன் செய்த கொடுமை

வீட்டின் உரிமையாளர் வந்து விசாரித்தபோது, அவர் கண் எதிரிலேயே மனைவியை திட்டியதுடன், கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.
இந்தூர்:
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் லாசுதியா பகுதியில் வசித்து வருபவர் ஆர்த்தி அகர்வால் (வயது 26). இவரது கணவர் ராகுல். இவர்களுக்கு 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 10 வயதில் மகனும், 8 வயதில் மகளும் உள்ளனர்.
இந்நிலையில், ஆர்த்தி தன் தங்கையுடன் அடிக்கடி போனில் பேசியுள்ளார். இது ராகுலுக்கு பிடிக்கவில்லை. தங்கையுடன் பேசக்கூடாது என மனைவியிடம் அடிக்கடி சண்டை போட்டுள்ளார். எனினும் அவருக்கு தெரியாமல் ஆர்த்தி, தங்கையை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், சம்பவத்தன்று ராகுல் தன் மனைவி ஆர்த்தியை சரமாரியாக தாக்கியதுடன், இடுக்கியால் சூடு வைத்துள்ளார். இதில் ஆர்த்தியின் கன்னம், கழுத்து, முதுகு மற்றும் உடற்பகுதியில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
ஆர்த்தியின் அழுகை சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் வந்து கதவை தட்டி உள்ளார். கதவை திறந்து பதில் அளித்த ராகுல், அவர் கண் எதிரிலேயே மனைவியை திட்டியுள்ளார். இனி உன் தங்கையுடன் பேசினால் எரித்து கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார். பின்னர் அவரது அத்தை வீட்டில் கொண்டு போய் விட்டுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 20-ம் தேதி நடந்துள்ளது. பயந்துபோன ஆர்த்தி வெளியில் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். பின்னர் அத்தையின் மூலம் பெற்றோருக்கு விஷயம் தெரியவந்தது. அவர்கள் கடந்த வியாழக்கிழமை ஆர்த்தியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






